மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

ஜி.எஸ்.டி: ஒடிசா வருவாய் 2.3% உயர்வு!

ஜி.எஸ்.டி: ஒடிசா வருவாய் 2.3% உயர்வு!

சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு அக்டோபர் வரையில், ஒடிசா மாநிலத்தின் வரி வருவாய் 2.3 சதவிகிதம் உயர்ந்து ரூ.3,735.14 கோடி வசூலாகியுள்ளது.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் ஜூலை மாதம் 1ஆம் தேதியிலிருந்து சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் அரசின் வரி வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒடிசா மாநிலத்தை எடுத்துக்கொண்டால், 2016ஆம் ஆண்டின் ஜூலை - அக்டோபர் மாதங்களில் மொத்தம் ரூ.3,651.28 கோடி வரி வசூல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் 2017இல், ஜி.எஸ்.டி அமலான பிறகு மேற்கூறிய அதே காலகட்டத்தில் ரூ.3,735.14 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதென்று ஒடிசா மாநில நிதியமைச்சர் சாஷி பூஷன் பெஹெரா தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி தவிர்த்து, பெட்ரோலியம் பொருள்களுக்கான மதிப்புக் கூட்டு வரி மற்றும் மத்திய விற்பனை வரி வாயிலாக ஒடிசா மாநிலத்தில் ரூ.4,415.20 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மட்டும் ரூ.2,934 கோடி செலுத்தியுள்ளது. இத்தொகை 2015 டிசம்பர் முதல் 2017 ஜூலை வரையிலான மதிப்புக் கூட்டு வரிப் பாக்கிக் தொகையாகும். புதிதாக அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டியின் கீழ் ஒடிசா மாநில அரசுக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதத்துக்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.333 கோடி கிடைத்துள்ளது என்றும் சாஷி பூஷன் பெஹெரா தெரிவித்துள்ளார்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது