மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 6 டிச 2017

விஜயகாந்த்: பிடிவாரன்ட் ரத்து!

விஜயகாந்த்: பிடிவாரன்ட் ரத்து!

பத்திரிகையாளர் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்டை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளரை தாக்கியதாக கடந்த 2013ஆம் ஆண்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் விசாரணை ஆலந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடைசியாக கடந்த மாதம் 14ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது விஜயகாந்த் ஆஜராகவில்லை. உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து டிசம்பர் 5ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே கடந்த 28ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக, விஜயகாந்த் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார்.

இந்த வழக்கின் விசாரணை நேற்று நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற்றபோது, மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் சிங்கப்பூர் சென்றிருப்பதால் அவரால் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், விஜயகாந்த் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பித்தது.

பிடிவாரண்டை ரத்துசெய்யக் கோரி விஜயகாந்த் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ( டிசம்பர் 6) முறையீடு செய்யப்பட்டது. அதில், " உடல்நலக்குறைவால் விஜயகாந்த் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதால், அவரால் ஆஜராக முடியவியல்லை" என்று கூறப்பட்டது. இதையடுத்து விஜயகாந்த் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை ரத்து செய்தும், இதுகுறித்து சென்னை விமான நிலைய போலீசாருக்கு தெரியப்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், விஜயகாந்த் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon