டிஎன்பிஎஸ்சி குரூப் 3 ஏ பணியிடங்களுக்கான நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 14 ஆம் தேதி முதல் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி செயலாளரும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியுமான (பொறுப்பு) மா.விஜயகுமார் நேற்று (டிசம்பர் 5) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவியில் 24 காலியிடங்களை நிரப்புவதற்கு 2013 ஆகஸ்ட் 3ஆம் தேதி தேர்வு நடந்தது.
அதேபோல் தொழில் மற்றும் வணிகத்துறை உதவி இயக்குநர் பணி, தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை செயல் அலுவலர் (கிரேடு-3), புவியியலாளர், உதவி புவியியலாளர் பதவி ஆகிய 4 தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டன. இந்தத் தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் டிசம்பர் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை சென்னை பாரிமுனையில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்க தகுதியானவர்களின் பதிவெண் பட்டியல் www.tnpsc.gov.in என்ற டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.