இந்தியன் ஜூனியர் பெண்கள் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவில் எந்தவித உதவியும் இன்றி தவித்து வருவதாக வெளியான வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 4) அன்று ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் ஒரு டாக்சி டிரைவர் இந்தியன் ஜூனியர் பெண்கள் ஹாக்கி அணியில் நிலையை வீடியோவாகப் பதிவிட்டு வெளியிட்டார். அதில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஹாக்கி தொடரில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ள இந்திய ஜூனியர் பெண்கள் ஹாக்கி அணிக்கு இந்திய அரசிடம் இருந்து எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால் அந்த வீராங்கனைகள் தொடரில் பங்கேற்க முடியாமல், உணவின்றி அங்கு தவித்து வருவதாகவும் அந்த வீடியோ பதிவில் பதிவாகி இருந்தது.
அந்த வீடியோவை டெல்லி எம்.எல்.ஏ. மன்ஜிந்தர் சிரஸா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அதனுடன் சுஸ்மா சுவராஜ் அவர்களே... இந்திய பெண்கள் அணி ஆஸ்திரேலியாவுக்கு இந்திய நாட்டின் சார்பாக விளையாட சென்றுள்ளனர். அவர்கள் வெற்றிபெற்று கோப்பைகளையும், பதக்கங்களையும் கைப்பற்ற நமது ஆதரவு தேவை. எனவே, இந்த அவர்களுக்கு விரைந்து உதவி செய்யுங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்திய விளையாட்டுத் துறை ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவலில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோவில் இருக்கும் இந்திய அணிக்கும் அதன் பயிற்சியாளருக்கும் இந்திய விளையாட்டுத் துறை ஆணையமோ, வெளி விவகாரத் துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜோ அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.