மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

முட்டை: வரலாறு காணாத விலையுயர்வு!

முட்டை: வரலாறு காணாத விலையுயர்வு!

நாமக்கல் மாவட்ட கோழிப் பண்ணைகளிலிருந்து நாள்தோறும் 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மொத்த உற்பத்தியில் இங்கிருந்து 4 சதவிகித முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், 2 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வட மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. அதேபோல, தமிழகத்தில் குளிரும், மழையும் மாறி மாறி வருவதால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலிருந்து வடமாநிலங்களுக்கு நாள்தோறும் 3 லட்சம் முட்டைகள் அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக முட்டைக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. நாமக்கலில் முட்டையின் கொள்முதல் விலை நவம்பர் 12ஆம் தேதி வரை ரூ.4.59 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்றைய (நவம்பர் 13) கொள்முதல் விலை 15 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ.4.74 ஆக உள்ளது. கொள்முதல் விலை இந்த அளவுக்கு உயர்வது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். சில்லறை விற்பனைக் கடைகளில் முட்டை விலை 6 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது.

தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்கு, ஒரு முட்டை ரூ.4.37க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தொடர் விலை உயர்வால் சத்துணவுக்கு எடை குறைவான புல்லட் முட்டைகள் அதிகளவில் விநியோகம் செய்யப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. சென்னையில் முட்டை ஒன்றின் விலை ரூ.5.05 ஆக உள்ளது.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon