மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

திருக்குலத்தார் உற்சவம்!

 திருக்குலத்தார் உற்சவம்!

மேல்கோட்டையில் ராமானுஜர் 12 முதல் 14 வருடங்கள் வரை இருந்திருக்கிறார். அங்கே தத்துவ விசாரணை வரை வைணவப் போர்க்களங்கள் வரை கருத்து, களம் இரண்டின் வகையிலும் போராடி வென்றிருக்கிறார் ராமானுஜர்.

சமய சீர்திருத்தம் என்பது சமூக சீர்திருத்தம் என்பதை உள்ளடக்கியதுதான் என்பதை மேல்கோட்டையில் நிரூபித்தார் ராமானுஜர். அதற்காக இன்றும் உதாரணமாக இருக்கிறது திருக்குலத்தார் உற்சவம்.

ஆம்,.திருநாராயணபுரத்தில் மட்டுமல்ல, இதன் அருகே உள்ள பேலூர் உள்ளிட்ட விஷ்ணுவர்த்தனன் கட்டிய வைணவக் கோயில்களில் எல்லாம் திருக்குலத்தார் உற்சவம் என்ற ஓர் உற்சவம் இன்றும் கொண்டாடப்படுகிறது.

அதென்ன திருக்குலத்தார் உற்சவம்?

ராமானுஜர் தொண்டனூரில் இருந்து புறப்பட்டு மேல்கோட்டைக்கு திருமண் தேடிச் சென்றார் அல்லவா?அப்போது துளசிக் காடு கடந்து சம்பக வனத்தில் புற்றுக்குள் அவர் திருநாராயணனின் மூல விக்ரகத்தைக் கண்டறிந்தார். அதற்குப் பிறகு மலை மேலே திருநாராயணனின் கோயில் முற்றிலும் சிதிலம் அடைந்ததைக் கண்டு விஷ்ணுவர்தனின் உதவியோடு மீண்டும் கட்டினார்.

அந்த கோயில் கட்டும் திருப்பணியில் உள்ளூர் மக்களைத்தான் முழுக்க முழுக்க பயன்படுத்தினார் ராமானுஜர். தாழ்ந்த குலத்தில் அவர்கள் பிறந்திருந்தாலும் அவர்களின் ஒவ்வொரு வேலையிலும் தன்னையும் சேர்த்து ஈடுபடுத்திக் கொண்டு கோயில் கட்டும் பணிகளில் அவர்களை ஆர்வமாக ஈடுபட வைத்தார் ராமானுஜர்.

மேல்கோட்டையில் இருந்த கற்களை உடைத்தே இந்த கோயில் கட்டப்பட்டது. அப்போது கல் உடைக்கும் தொழிலாளர்களோடு தானும் சேர்ந்து கல் உடைப்பதில் ஒத்துழைப்பு கொடுப்பார். இப்படி ஒவ்வொரு பணி செய்வோர் மத்தியிலும் நின்று அவர்களோடு தான் இருக்கிறேன் என்ற தைரியத்தை அளித்தார் ராமானுஜர். பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தனது மடத்தில் இருந்தே உணவுக்கும் ஏற்பாடு செய்தார் ராமானுஜர்.

.இப்படி உள்ளூர் மக்களோடு ஒன்றோடு ஒன்றாக ராமானுஜர் இருந்தாலும் அவர்கள் ராமானுஜரை உயர் குலத்தாராகவே பார்த்தனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும் சமூக நிலைமை என்று யோசித்துப் பாருங்கள்.

அவர்களுக்கு இடையே இருக்கும் தாழ்வு மனப்பான்மையை அகற்றிடவே அம்மக்களுக்கு திருக்குலத்தார் என்று பெயரிட்டார் ராமானுஜர். அவர்கள் எல்லாம் நெகிழ்ந்து போனார்கள்.

கோயில் கட்டியாகிவிட்டது, கோயில் கட்டுமானப் பணிகள் முடிவடையும் தருவாயில்தான் உற்சவரான செல்வநாராயணனைத் தேடி ராமானுஜர் சென்றார். வட தேசத்தில் இருந்து ராமானுஜர் செல்வநாராயணன் சிலையோடு திரும்பி வருகையில்...கிட்டத்தட்ட மேல்கோட்டையை நெருங்கிவிட்ட நிலையில் கள்வர் கூட்டமொன்று ராமானுஜரிடம் இருந்து சிலையை பறிக்க முயல... அப்போது அவர்களுக்கு எதிராக போராடி சிலையை மீட்டவர்கள் இந்த திருக்குலத்தார்கள்தான்.

மேல்கோட்டை கோயிலைக் கட்டியதில் மட்டுமல்ல...உற்சவர் சிலையை அங்கே பிரதிஷ்டை செய்வது வரை திருக்குலத்தாரின் பணிகள் இன்றி எதுவும் நடைபெற்றிருக்காது என்பதை அறிவார் ராமானுஜர்.

ஆனால் அன்றைய காலத்தில் வியர்வை மட்டுமே திருக்குலத்தாருக்குக் கிடைத்து வந்தது. கோயிலுக்குள் தீர்த்தம் என்பது அவர்களுக்கு கிடைக்காமலே இருந்தது. இந்த நிலையை உடைத்து மேல்கோட்டையை சாதிக் கோட்டை தகர்த்த வைணவக் கோட்டையாக மாற்றினார் ராமானுஜர்.

ஆம்... யார் கையால் கோயில் கட்டப்பட்டதோ அவர்கள் கோயிலுக்குள் செல்லக் கூடாது என்று இருந்த நிலையை மாற்றி, திருக்குலத்தாரை கோயிலுக்குள் அழைத்துச் சென்று தீர்த்தம் சடாரி கொடுத்தார் ராமானுஜர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ராமானுஜரைத் தவிர வேறு எந்த கொம்பனும் இந்த சமய சீர்திருத்தத்தை சாதிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அதுமட்டுமல்ல... ஒவ்வொரு வருடமும் மேல்கோட்டை கோயில் உற்சவத்தில், தேர்த் திருவிழாவுக்கு அடுத்த மூன்று நாட்களும் திருக்குலத்தார் உற்சவம் என்று இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.

வரலாற்றில் இது ராமானுஜரின் வலிமையான சீர்திருத்தக் கல்வெட்டு! மேல்கோட்டை இதனால் இன்னும் மேம்பட்ட கோட்டையானது.

வைணவம் என்று வந்துவிட்டால் எந்த சாதி பேதத்துக்கும் இடம் கொடுக்காமல் ராமானுஜர் செயல்பட்டதற்கான இன்னொரு சாட்சிதான் மேல்கோட்டை திருக்குலத்தார் உற்சவம்.

ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் தலைவர் வைணவச் செம்மல் ஜெகத்ரட்சகன் அவர்களும் ராமானுஜர் வழியிலேயே...சர்வ பேதங்களையும் தாண்டி வைணவத்தைக் கொண்டு சேர்க்கும் வரலாற்றுப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

ஆழ்வார்கள் ஆய்வு மையம் வளரட்டும்... ராமானுஜர் புகழ் ஓங்கட்டும்!

விளம்பர பகுதி

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon