மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

இந்திரஜித்: இது சும்மா டிரெய்லர் தான்...

 இந்திரஜித்: இது சும்மா டிரெய்லர் தான்...

ஐந்து லட்சம் பார்வையாளர்களைப் பெற்று, யூடியூபின் டாப் 10 வீடியோக்களில் ஒன்றாக டிரெண்டாகிக்கொண்டிருக்கிறது இந்திரஜித் டிரெய்லர். இது ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வெளியான இந்திரஜித் திரைப்பட டீசருக்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் வரவேற்பு என்று சொன்னால் ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால், உண்மை இது தான்.

கலாபிரபு இயக்கத்தில் கௌதம் கார்த்திக், சுதன்ஷு பாண்டே, அர்ஷிதா ஷெட்டி, சொனாரிகா பதோரியா உட்பட பலர் நடித்திருக்கும் இந்திரஜித் திரைப்படத்தின் டிரைய்லர் கடந்த 10ஆம் தேதி ரிலீஸானது. மூன்று நாட்களாக டாப் 5 இடங்களுக்குள் இருக்கிறது. டீசரில் பார்வைக்கு வைக்கப்பட்ட காட்சிகளின் நீட்சியை விரிவாகப் பேசியிருக்கும் இந்த டிரெய்லர் ஏற்கனவே இருந்த எதிர்பார்ப்பை மேலும் கூட்டியிருக்கிறது.

ஒரு பொருளைத் தேடிக்கொண்டிருக்கும் பேராசிரியர் பின்னால் செல்கிறார் சுதன்ஷு பாண்டே. இவரும் ஆராய்ச்சியாளர். இண்டியானா ஜோன்ஸுக்கு சமமாக கௌதமால் புகழப்படும் இவரே கண்டுபிடிக்கமுடியாத ஒரு பொருளை பேராசிரியர் மயில்வாகனம் கண்டுபிடிக்கிறார் என்றால், அதைத் தொடர்ந்து இவரும் செல்கிறார் என்றால் அது அத்தனை சாதாரணமான பொருளாக இருக்காது.

வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும் அந்தப் பொருளை நோக்கி ஒரு பேராசிரியரும், மிகப்பெரிய அகழ்வாராய்ச்சியாளரும் செல்லும்போது இடையே சிக்கிக்கொள்கிறார் கௌதம் கார்த்திக். சிக்கிக்கொள்கிறார் என்பது படம் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கும் அவரது டிரெய்லர் காட்சிகள் தெரிவிக்கின்றன. கடைசி காட்சியில்கூட ‘நான் டூரிஸ்டு’ என்று சொல்லி எஸ்கேப் ஆக முயற்சிப்பது படம் முழுக்க நகைச்சுவையான ஒரு ஹீரோயிசத்தை வெளிப்படுத்தப்போகிறார் என்பதை உறுதிசெய்கிறது.

ஒவ்வொரு காட்சிக்கும் பிரம்மாண்டத்தை விதைக்க கலாபிரபு கொடுத்திருக்கும் உழைப்பு நன்றாகவே தெரிகிறது. எது கிராஃபிக்ஸ், எது உண்மையான பூமியில் எடுக்கப்பட்ட காட்சி என்பதை வித்தியாசப்படுத்திப் பார்க்கமுடியாத அளவுக்கு கம்ப்யூட்டரிலும் உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். படத்தின் முக்கிய கேரக்டர்களாக வரும் மூவரையும் சுற்றியே கதை நடைபெறுவதை டிரெய்லர் காட்டுகிறது. அதிலும், பேராசிரியர் மயில்வாகனன் இடம்பெறும் காட்சிகள் அனைத்திலும் தமிழகத்தின் வழிபாட்டு வடிவங்களும், கலைப் பொருட்களும் இடம்பெறுவது ஏதோவொரு புதிய அனுபவத்துக்கு நம்மை தயார் செய்துகொள்ள ஊக்குவிக்கின்றன.

படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் டிரெய்லரின் பலமாக விரசமில்லாத காட்சிகளும், சங்கத்தமிழுக்குக் கொண்டு செல்லாமல் இயல்பு நடையிலேயே இடம்பெற்றுள்ள வசனங்களும் இருக்கின்றன. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது என்பதற்காக முழுக்க முழுக்க கம்ப்யூட்டருக்குள் கற்பனையைத் திணிக்காமல் பல்வேறு நாடுகளுக்குப் பயணப்பட்டு ஒவ்வொரு இடத்திலும் உயிரைப் பணயம் வைத்து எடுக்கப்பட்டிருக்கும் உண்மையான காட்சிகள் பாராட்டப்படவேண்டியவை. மலை, காடு, அருவி, விமானம், கார், பைக், ஓட்டம் என அனைத்து விதமான சாகசங்களையும் ஒரே டிரெய்லருக்குள் அடக்கியிருக்கிறார்கள். இவை எல்லாமே ஒரு சிறிய டிரெய்லர் தான், இவற்றின் முழு சுவாரஸ்யமும் படம் பார்க்கும்போது அனுபவிக்க எடுத்துவைக்கப்பட்டிருக்கின்றன.

காட்சிகளின் அழகையும், அவை ஏற்படுத்தும் பிரம்மாண்ட உணர்வையும் மேலும் கொதிக்கவைக்கும் அந்த பின்னணி இசையை உருவாக்கியவர் இசையமைப்பாளர் கே.பி. இந்த தீம் பாடலுக்கு மட்டுமல்ல, இந்திரஜித் திரைப்படத்தில் உருவாக்கப்பட்டுள்ள அனைத்துப் பாடல்களுக்கும் ஒரு பின்னணி இருக்கிறது. அவற்றைப் பற்றி விளக்கமாக சொல்ல அவற்றை உருவாக்கியவரைத் தவிர வேறு யாரால் முடியும்?

நாளை(14.11.2017) முதல் இந்திரஜித் திரைப்படத்தின் இசையமைப்பாளர் கே.பி. இந்த பகுதியில் உங்களுடன் பேசுவார். இப்போதைக்கு ஒரு ரகசியம் மட்டும் சொல்லலாம். அவர் உருவாக்கிய இந்த தீம் பாடல், கர்நாடக ஹிந்துஸ்தான் இசை கலந்த வேறொரு பாடல்.

இந்திரஜித் டிரெய்லர்

விளம்பர பகுதி

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon