மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

20,000 செல்போன் டவர்கள் விற்பனை!

20,000 செல்போன் டவர்கள் விற்பனை!

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களான வோடஃபோன் மற்றும் ஐடியா தங்களது நெட்வொர்க் டவர்களை ஏ.டி.சி. (அமெரிக்கன் டவர் கார்பரேஷன்) நிறுவனத்திடம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளன.

வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நெட்வொர்க்கை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் இவ்விரு நிறுவனங்களுக்கும் சொந்தமாக உள்ள சுமார் 20,000 டவர்களை ஏ.டி.சி. நிறுவனத்திடம் ரூ.7850 கோடிக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும் பட்சத்தில், ஐடியா நிறுவனத்திற்கு ரூ.4,000 கோடியும், வோடஃபோன் நிறுவனத்திற்கு ரூ.3,850 கோடியும் கிடைக்கும்.

ஏ.டி.சி. நிறுவனம் உலகம் முழுவதும் 1,50,000 டவர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இத்துடன் தற்போது 100 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட 20,000 டவர்கள் இணையவுள்ளது. இந்த இணைப்பு 2018 ஆண்டின் முதல் பாதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனம் அளித்துள்ள அறிக்கையில், ’வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் ஏ.டி.சி. நிறுவனத்தின் கீழ் செயல்படவுள்ளன. இந்த இணைப்பின் மூலம் இந்தியா முழுவதும் அதிவேக இணையச் சேவையை வழங்கத் திட்டமிட்டுள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கும் வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைந்த பிறகு, முதல் இடத்தில் இருக்கும் ஏர்டெல் நிறுவனத்துடன் போட்டியிடத் தயாராகவுள்ளது. மேலும், வேகமாக வளர்ந்துவரும் ரிலையன்ஸ் ஜியோவுக்கும் இந்த இணைவு கடும் நெருக்கடி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon