மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

டாஸ்மாக்: உச்ச நீதிமன்றம் அனுமதி!

டாஸ்மாக்: உச்ச நீதிமன்றம் அனுமதி!

ஊரகப் பகுதிகளிலுள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

நோய்களால் ஏற்படும் மரணங்களைவிட மது போதையால் ஏற்படும் சாலை விபத்து மரணங்களே அதிகம். எனவே, தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் இருக்கும் மதுக்கடைகளை மூடவேண்டும் என்றுகூறி சமூக நீதி பேரவை தலைவர் க.பாலு கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் கடந்த மார்ச் 31ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், "இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் இருக்கும் அனைத்து மதுக்கடைகளையும் உடனே மூட வேண்டும்" என்று உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து தமிழகத்திலுள்ள 5672 மதுக்கடைகளில் நெடுஞ்சாலைகளிலுள்ள 3321 மதுக்கடைகளை உடனடியாக மூடப்பட்டன.

ஆனால் தேசிய நெடுஞ்சாலைகளை மாநில, ஊரக நெடுஞ்சாலைகளாக மாற்றிக்கொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. இதற்கு எதிராகப் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து உள்ளாட்சிப் பகுதிகளிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளை திறக்கத் தடை விதித்துச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் டாஸ்மாக் திறப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசின் மனு இன்று (நவம்பர் 13) விசாரணைக்கு வந்தது. அதில், "தேசிய நெடுஞ்சாலைகளை, ஊரக சாலைகள் என்று பெயர் மாற்றம் செய்தது தொடர்பாக தமிழக அரசின் பதிலை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கும் அனுமதியளித்தது. இது தொடர்பான எழுத்துபூர்வமான வாதம் பின்னர் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் ஒரு சில நாட்களில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் திரும்பவும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon