மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

அதிக மூலதனம்: பெருகும் வங்கிக் கடனுதவி!

அதிக மூலதனம்: பெருகும் வங்கிக் கடனுதவி!

வங்கிகளுக்கு அதிக மூலதனத்தை ஒதுக்கீடு செய்தால் தான் அவ்வங்கிகள் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் வழங்கும் நடவடிக்கை அதிகரிக்கும் எனவும், அதனால் வேலைவாய்ப்புப் பெருகும் எனவும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

வாராக் கடன் பிரச்னைகளால் தவித்து வரும் இந்திய வங்கித் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் கடந்த மாதம் மத்திய அரசு ரூ.2.11 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில் வங்கித் துறைக்கான மூலதனத்தை அதிகரிப்பது குறித்து நவம்பர் 12ஆம் தேதி குருகிராம் நகரத்தில் நடந்த பொதுத் துறை வங்கிகளுக்கான கூட்டத்தில் மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி பேசுகையில், “பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் இந்தியப் பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சிக்காக அதிகளவில் முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வங்கித் துறையின் வளர்ச்சிக்கு பொது முதலீடு மற்றும் அந்நிய நேரடி முதலீடுகள் அதிகளவில் மேற்கொள்ளப்படுவது அவசியமாகிறது. அதனுடன் தனியார் முதலீடும் தேவைப்படுகிறது.

அதிக மூலதனம் இருந்தால் மட்டுமே சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குத் தேவையான கடன்களை வங்கிகளால் வழங்க இயலும். இத்துறை பலருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. இத்துறைக்குச் சர்வதேச நிதியாதாரமோ அல்லது கடன் பத்திரத் திட்ட வசதியோ இல்லை. எனவே அரசானது வங்கித் துறைக்கு அதிக மூலதனத்தை வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் வங்கிகளின் கடன் வழங்கும் நடவடிக்கை சிறக்கும்” என்று பேசினார்.

இந்தியப் பொதுத் துறை வங்கிகளுக்கு 2017 ஜூன் மாதம் வரையில் ரூ.7.33 லட்சம் கோடி வாராக் கடன் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 2015 மார்ச் மாதம் வாராக் கடன் அளவு ரூ.2.78 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் மத்திய அரசானது பொதுத் துறை வங்கிகளின் மேம்பாட்டுக்காக ரூ.51,000 கோடி மூலதனம் வழங்கியுள்ளது.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon