மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

காந்தி படத்தை நீக்கக் கோரியவருக்கு அபராதம்!

காந்தி படத்தை நீக்கக் கோரியவருக்கு அபராதம்!

ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படத்தை நீக்கக் கோரியவருக்கு அபராதம் விதித்துச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய அரசின் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்தை அச்சிடக் கூடாது என்று ராமநாதபுரத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் கள்ள நோட்டுகள் அச்சிடப்படுவது,ரூபாய் நோட்டுகளில் கிறுக்கப்படுவது ஆகியவை, தேசத்தின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட தேசப் பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியை அவமதிக்கும் வகையில் உள்ளது. எனவே காந்தியின் புகைப்படத்தை ரூபாய் நோட்டுகளிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று (நவம்பர் 13) தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசியல் சட்டப்படி தீவிர ஆலோசனைக்குப் பிறகே ரூபாய் நோட்டில் காந்தியின் படம் அச்சிடப்பட்டுவருகிறது என்று கூறி, வழக்கு தொடர்ந்த முருகானந்தத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

ஆரம்பத்தில் இந்திய ரூபாய் நோட்டுகளில் வேறு அடையாளங்கள்தான் அச்சிடப்பட்டுவந்தன. 1996 முதல் ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் அச்சிடத் துவங்கப்பட்டது. இந்தியா முழுவதிலும் பரவலாக எல்லோராலும் மதிக்கப்படும் ஆளுமை என்பதால் காந்தியின் படம் ரூபாய் நோட்டுக்களில் அச்சிடப்பட்டது. 1969இல் காந்தியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது அதைக் குறிக்கும் விதமாக அந்த ஆண்டு வெளியிடப்பட்ட நோட்டுக்களில் காந்தியின் படம் இடம்பெற்றது. எனினும் 1996க்குப் பிறகே எல்லா நோட்டுக்களிலும் காந்தி படம் இடம்பெறத் தொடங்கியது.

இங்கே காணப்படும் ரூபாய் நோட்டில் காந்தியும் பிரிட்டிஷ் அரசியல்வாதி லார்ட் ஃப்ரெடெரிக் வில்லியமும் ஒன்றாக இருக்கும் படம் இடம்பெற்றுள்ளது. இந்தப் படம் 1946இல் எடுக்கப்பட்டது.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon