மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

சாம்பியன்ஷிப்: சுவாரஸ்யமான வெற்றி!

சாம்பியன்ஷிப்: சுவாரஸ்யமான வெற்றி!

சாம்பியன்ஷிப் தொடரான ஏ.டி.பி டூர் நேற்று முன்தினம் (நவம்பர் 11) தொடங்கியது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் வருடத்தின் தொடக்கம் முதல் பல்வேறு தொடர்களில் விளையாடி வெற்றி பெறுவதன் மூலம் புள்ளிகளை பெறுவர். அதன் அடிப்படையில் வருட இறுதியில் வீரர்கள் தரவரிசைபடுத்தப்படுவர். இதில் முதல் 8 இடங்களுக்குள் இடம்பெறும் வீரர்கள் ஏ.டி.பி டூர் பைனலில் விளையாடத் தகுதி பெறுவர்.

அதனடிப்படையில் இந்த வருடம் தரவரிசையில் முதல் 8 வீரர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் இன்று (நவம்பர் 13) நடைபெற்ற போட்டியில் முதல் முறையாக ஏ.டி.பி டூருக்கு தகுதி பெற்ற அலெக்சாண்டர் ஜேவ்ரேவ், தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள மரின் சிலிக் உடன் மோதினார். இருவரும் முதலில் இருந்து சரிசமமாக விளையாடினர்.

முதல் செட்டினை அலெக்சாண்டர் ஜேவ்ரேவ் 6-4 என்ற செட் கணக்கில் கைப்பற்றி மரின் சிலிக் ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் சிறப்பாக விளையாடிய மரின் சிலிக் இரண்டாவது செட்டினை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். எனவே வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட் மிக சுவாரஸ்யமாக நடைபெற்றது. நீண்ட நேரம் நடைபெற்ற இந்த செட்டினை அலெக்சாண்டர் ஜேவ்ரேவ் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில் அலெக்சாண்டர் ஜேவ்ரேவ் அரையிறுதிக்குத் தகுதி பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்து காண்போம்.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon