மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

இருப்பு வைத்த பருப்புகள் விநியோகம்!

இருப்பு வைத்த பருப்புகள் விநியோகம்!

சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைத்துள்ள பருப்புகளை அரசு நலத் திட்டப் பணிகளின் கீழ் விநியோகிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும், நாட்டில் பருப்புக்கான தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும் கடந்த ஆண்டில் குறிப்பிட்ட அளவிலான பருப்பை மத்திய அரசு இருப்பு வைத்திருந்தது. அதனைத் தற்போது பள்ளிகளில் மதிய உணவு உள்ளிட்ட அரசின் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்கள் அமைச்சரவைக் குழுவில் இதுகுறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை அடுத்த மூன்று மாதங்களுக்குள் அமல்படுத்தச் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அமைச்சகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பருப்புகளின் தேவைகளை அறிந்து அதனை விநியோகம் செய்யும் பொறுப்பு நுகர்வோர் விவகாரங்கள் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைத்துள்ள பருப்புகளை நேரடியாகத் தேவைக்கேற்ப அரசின் நலத் திட்டப் பணிகளின் கீழ் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் போதிய விளைச்சல் இல்லாதது மற்றும் விலையேற்றத்தின் காரணமாக உள்நாட்டு நுகர்வுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல், அதிகளவில் பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு இன்று வரை மாநில அரசுகள் சேமிப்புக் கிடங்கில் இருப்பு வைத்திருந்த பருப்புகளையே பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon