மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

ஆட்சியர் அலுவலகம்: தீக்குளிக்க முயன்றவர்கள் கைது!

ஆட்சியர் அலுவலகம்: தீக்குளிக்க முயன்றவர்கள் கைது!

கன்னியாகுமரி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற ஐந்து பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

நெல்லைத் தீக்குளிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்ப்பதைத் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மனு கொடுக்க வரும் பொதுமக்கள் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ள அனுமதிக்கப்படுகின்றனர். இருப்பினும் அவற்றை மீறிப் பல மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. அதுபோன்று நாகர்கோயிலில் தீக்குளிக்க முயன்ற ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதி மக்களுக்குத் தெருவிளக்கு, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு பலமுறை ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் , மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தீக்குளிப்புப் போராட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது

அதன்படி இன்று (நவம்பர் 13) அந்தக் கட்சியின் மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் ஆவுடைகண்ணன், கவிதா, ராமஜெயநாயர், சிவா ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.

மண்ணெண்ணெய் கேனுடன் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம், ஏற்பட்டது. இந்நிலையில் திடீரென ஆவுடைகண்ணன் தான் வைத்திருந்த மண்எண்ணெயை மேலே ஊற்றித் தீக்குளிக்க முயன்றார்.

இதனைத் தடுத்து நிறுத்தித் தீக்குளிக்க முயன்ற ஐவரையும் கைது செய்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர். ஆவுடைகண்ணன் மீது மண்ணெண்ணெய் ஊற்றியிருந்ததால் அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon