மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

துறைமுக மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு!

துறைமுக மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு!

மும்பையிலுள்ள ஜல்னா மற்றும் வர்தா துறைமுகங்களை மேம்படுத்தும் பணியில் ஜவஹர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் இறங்கியுள்ளது. இதற்காக ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் (ஜே.என்.பி.டி.) மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியாவின் மிகப்பெரிய கண்டெய்னர் துறைமுகமாகும். இதன் கட்டுப்பாட்டில் அவுரங்கபாத் நகருக்கு அருகிலுள்ள ஜல்னா துறைமுகம் மற்றும் நாக்பூருக்கு அருகிலுள்ள வர்தா துறைமுகம் ஆகிய இரண்டையும் மேம்படுத்தும் பணியில் ஜே.என்.பி.டி. இறங்கியுள்ளது. இவ்விரண்டு துறைமுகங்களும் ஆண்டுக்குத் தலா 20,000 கண்டெய்னர்களைக் கையாளும் கொள்திறனைக் கொண்டுள்ளன. இவற்றை மேம்படுத்தத் தலா ரூ.400 கோடி என மொத்தம் 800 கோடி ரூபாயை ஜே.என்.பி.டி. செலவிடத் திட்டமிட்டுள்ளது. இப்பணிகளுக்கு மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தனது பங்களிப்பை வழங்குகிறது.

இதுகுறித்து ஜே.என்.பி.டி. சரக்குகள் பிரிவின் நிர்வாக அதிகாரியான சி.உன்னி கிருஷ்ணன் பிசினஸ் லைன் ஊடகத்திடம் கூறுகையில், ”ஜல்னா மற்றும் வர்தா துறைமுகங்களின் மேம்பாட்டுப் பணிகள் அரசு - தனியார் கூட்டு முதலீட்டில் நடைபெறுகிறது. ஏற்கனவே பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் இன்னும் 18 மாதங்களுக்குள் மேம்பாட்டுப் பணிகள் முற்றிலும் நிறைவுபெற்றுவிடும். நிலம் கையகப்படுத்தும் பணி ஏற்கெனவே முடிந்துவிட்டது. இப்பணிகள் நிறைவுபெறும் பட்சத்தில் சரக்குகளைக் கையாளும் கால அவகாசம் குறைவதோடு, ஏற்றுமதியாளர்களுக்கு 20 சதவிகித செலவுகள் குறையும்” என்றார்.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon