மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

நீட் தேர்வு விலக்கே தீர்வு!

நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அமைப்பது மாணவர்களை ஏமாற்றும் வேலை என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

தமிழகத்தில் நீட் உட்பட தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வுகளை எதிர்கொள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான பயிற்சி மையங்கள் இன்றுமுதல் தொடங்கும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

” தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட், ஐ.ஐ.டி தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளிப்பதற்கான மையங்கள் தொடங்கப்படுவது, தமிழகத்தின் மீது நீட் தேர்வு திணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளும் செயல் என்பதுடன், மாணவர்களை ஏமாற்றும் செயலும் ஆகும்.

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு முன்பாக, மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் நீட் தேர்வை தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறதா? என்ற வினாவுக்கு விடை காணப்பட வேண்டும்.

நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகளை மதிக்காமல் மத்திய அரசு ஆடிய ஆட்டத்தால் மாணவி அனிதாவின் உயிரையும், ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவையும் இழந்தோம். நீட் தேர்வை முறியடிப்பதற்கான சட்டப்போராட்டத்தை நடத்தாமல், மத்திய அரசின் கட்டளைக்கு பணிந்து நீட் தேர்வை ஏற்றுக் கொள்ளத் தயாராகி விட்ட தமிழக அரசின் முடிவு ஊரக, ஏழை மாணவர்களுக்கு இழைக்கப்படும் பெருந்துரோகம் ஆகும்.

கற்பித்தல் என்பது மாணவர்களுக்கு ஆசிரியர் நேரடியாக பாடம் நடத்துவது ஆகும். ஆனால், தமிழக அரசின் இலவச நீட் மற்றும் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு பயிற்சி என்பது அப்படிப்பட்டதல்ல. அனைத்து மையங்களும் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, அங்கு நடத்தப்படும் பாடங்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் 412 மையங்களுக்கும் ஒளிபரப்பப்படும் என்று பயிற்சி அளிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வகுப்பறை போன்ற கட்டமைப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் தான் மாணவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவு பெற முடியும். வீடியோ கான்பரன்சிங் முறையில் இது சாத்தியமில்லை.

தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளில் புகழ்பெற்ற பயிற்சி நிறுவனங்களின் மூலம் ஆண்டுக்கு ரூ.1.80 லட்சம் வரை கட்டணம் வசூலித்து நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாறாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு பயனற்ற பயிற்சி அளிக்கப்படுவதால் இரு தரப்பினருக்கும் கல்வி இடைவெளி அதிகரிக்கும்.

தமிழக அரசு நினைத்தால் 412 மையங்களுக்கும் மொத்தம் 1000 ஆசிரியர்களை நியமித்து நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கலாம். ஆனால், இவற்றையெல்லாம் செய்யாமல் விளம்பரத்திற்கு நீட் பயிற்சி மையங்களைத் தொடங்கி தமிழ்நாட்டு மக்களையும், மாணவர்களையும் தமிழக அரசு ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவது தான் இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வாகும். அதற்கான சட்டப்போராட்டம் இன்னும் முடியாத நிலையில், அதை முழுவீச்சில் தமிழக அரசு நடத்த வேண்டும்” என்று தெரிவித்திருக்கும் ராமதாஸ், வேண்டுமானால் நன்றாகப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு இந்த இடைக்காலப் பயிற்சியை அளிக்கலாம் என்றிருக்கிறார்.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon