மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

பனிமூட்டம்: 8 ரயில்கள் ரத்து!

பனிமூட்டம்: 8 ரயில்கள் ரத்து!

டெல்லியில் நிலவிவரும் கடும் பனிமூட்டம் காரணமாக 64 ரயில்கள் தாமதம் ஆனது. 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவிவருகிறது. அருகில் செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்குக் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் சனிக்கிழமை நிலவிய கடும் பனி மற்றும் புகை மூட்டம் காரணமாக 64 ரயில்கள் தாமதமாக சென்றன. 14 ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. நேற்று( நவம்பர் 12) 34 ரயில்கள் தாமதமாக சென்றன. 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், இன்றும் (நவம்பர் 13) கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. காலை 8.30 மணிக்கு 400 மீட்டர் தூரம் வரை பார்வை தெரியாத நிலையில் பனி மூட்டம் இருந்தது. இதனால் வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே மெதுவாக வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டிச் சென்றனர். டெல்லி-வாரணாசி மகனாமா எக்ஸ்பிரஸ், டெல்லி- ஆசம்கர் காய்பியத் எக்ஸ்பிரஸ், ஆனந்த் விகார்- மாவு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 22 ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று இதுவரை விமான சேவையில் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை.

மேலும் இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகமுள்ள நகரங்களில் உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon