மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

பயங்கர நிலநடுக்கம்; 168 பேர் பலி!

பயங்கர நிலநடுக்கம்; 168 பேர் பலி!

ஈராக் எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில்168 க்கும் மேற்பட்டோர் பலியாயினதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஈரான், ஈராக்கில் இன்று (திங்கட்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ஈராக் பகுதியில் இருக்கும் குர்திஸ்தான் அரசால் நிர்வகிக்கப்படும் சுலைமணியா நகரத்தில், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, சுலைமணியாவின் தென்கிழக்குப் பகுதியில், உள்ளூர் நேரப்படிகாலை 9.18 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்புள்ளியானது குர்திஸ்தான் மாகாணத்தின் சுலைமானியா பகுதியில் பெஞ்வின் எனுமிடத்தில் நிலை கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.3ஆகப் பதிவாகியிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. ஆனால், ஈராக் அரசு நிலநடுக்கத்தின் தாக்கம் 6.5 ரிக்டர் எனக் கூறுகிறது.

இந்த பயங்கர நிலநடுக்கத்துக்கு இதுவரை 168 பேர் பலியாகியுள்ளனர். கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். துபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் பல இடங்களிலும் இந்நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈராக் எல்லையை ஒட்டிய கேர்மான்ஷா மாகாணத்தில்தான் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த மாகாணத்தின் துணை ஆளுநர் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், "கட்டிட இடிபாடுகளுக்கு இடையே ஏராளமான மக்கள் சிக்கியுள்ளனர். பலி எண்ணிக்கை உயரக் கூடாது எனவே விரும்புகிறோம். ஆனால் நிலைமையைப் பார்த்தால் அது கடினம் என்றே தெரிகிறது" என்றார்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஈரான், ஈராக்கில் பல்வேறு இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகள் பல சேதமடைந்துள்ளதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சீரான சாலைகள் இல்லாததால் கிராமப்புறங்களுக்குச் செல்ல முடியவில்லை, அங்கு நிலவரம் எப்படி இருக்கிறது என்பதைக் கணிக்க முடியவில்லை என அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon