மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

ஏர் ஏசியா: 99 ரூபாய்க்கு விமானப் பயணம்!

ஏர் ஏசியா: 99 ரூபாய்க்கு விமானப் பயணம்!

இந்தியாவின் உள்நாட்டுப் பயணத்திற்கு அடிப்படைக் கட்டணமாக 99 ரூபாயில் விமானப் பயணம் வழங்கும் புதிய சலுகைத் திட்டம் ஒன்றை ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது.

மலேசியாவின் ஏர் ஏசியா பெர்காடு நிறுவனமும் இந்தியாவின் டாடா குழுமமும் இணைந்து உருவாக்கிய ஏர் ஏசியா இந்தியா நிறுவனம், இந்தியாவில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு, குறைந்த கட்டணத்தில் விமானப் போக்குவரத்துச் சேவைகளை வழங்கி வருகிறது. இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் பல்வேறு பெரிய நிறுவனங்கள் தங்களுக்குள்ளான போட்டியைப் பலப்படுத்தும் வகையில் குறைந்த கட்டணத்தில் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதேநேரம் ஏர் கார்னிவல், ஜூம் ஏர் போன்ற புதிய விமான நிறுவனங்கள் தங்களது சேவையைத் தொடங்கியுள்ளதால் அதிகரித்துவரும் போட்டியைச் சமாளிக்க சிறப்புச் சலுகைகளை அறிவித்து அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியில் இந்நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் ஏர் ஏசியா நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

அதன்படி, இந்தியாவில் குறைந்தபட்சக் கட்டணமாக ஒருவழிப் பயணத்துக்கு ரூ.99 அடிப்படைக் கட்டணமும், சர்வதேச பயணங்களுக்கு ரூ.444 அடிப்படைக் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சலுகையைப் பெறுவதற்கு நவம்பர் 12 நள்ளிரவு 11.30 மணி முதல் நவம்பர் 19 நள்ளிரவு வரையில் மட்டுமே முன்பதிவு செய்ய இயலும். இச்சலுகையைப் பயன்படுத்தி ஏர் ஏசியா விமானங்களில் பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத் புவனேஷ்வர், ராஞ்சி, கொல்கத்தா, டெல்லி, கோவா உள்ளிட்ட நகரங்களுக்குப் பயணிக்கலாம். அதேபோல, சர்வதேசப் பயணங்களில், திருச்சி, கொச்சி, டெல்லி, புவனேஷ்வர், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்கும், ஜெய்ப்பூர், கொல்கத்தா, கொச்சி, சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களிலிருந்து பாலி நகருக்கும் பயணிக்க இயலும்.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon