மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

துரிதமாகும் இந்தியா - கனடா ஒப்பந்தம்!

துரிதமாகும் இந்தியா - கனடா ஒப்பந்தம்!

டெல்லியில் நான்காவது அமைச்சரவை ஆண்டு உரையாடல் கூட்டம் இன்று (நவம்பர் 13) நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், இந்தியா - கனடா நாடுகளிடையே பொருள் மற்றும் சேவைகளுக்கான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும் என்று அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கனடாவின் சர்வதேச வர்த்தக அமைச்சரான பிரான்காயிஸ் பிலிப்பே ஷாம்பயின் தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிக் குழு டெல்லியில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள இந்தியா வந்துள்ளது. இந்தியாவின் உயர்மட்டக் குழுவுக்கு மத்திய வர்த்தக அமைச்சரான சுரேஷ் பிரபு தலைமை வகிப்பார். இதுபற்றி அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “இக்கூட்டத்தின் முதல் சுற்றில் இருநாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை வலுப்படுத்த சில முக்கிய வர்த்தக விவகாரங்கள் விவாதிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியா கனடா இடையேயான சரக்கு வர்த்தகத்தின் மதிப்பு 2016-17ஆம் ஆண்டில் 6.13 பில்லியன் டாலராக இருந்தது. இது 2015-16ஆம் ஆண்டின் மதிப்பை விட 1.87 சதவிகிதம் குறைவாகும். இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகம், முதலீடுகளை ஊக்குவிக்கக் கூட்டு ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் சுமார் 12 லட்சம் பேர் கனடாவில் உள்ளனர். அதாவது, கனடாவின் மக்கள் தொகையில் 3 சதவிகிதப் பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon