மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம்!

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம்!

கழிப்பறை கட்டுவதற்கு 20ஆயிரம் ரூபாய் உதவி, ’ஒரு மாவட்டம் ஒருபொருள்’ என்ற திட்டத்தின் கீழ் கைவினைத்தொழில் ஊக்குவிப்பு என 28 உள்ளாட்சித் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறார் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

வரும் நவம்பர் மாத இறுதியில், உத்தரபிரதேச மாநிலத்தில் மூன்று கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலுக்காக, உ.பி. பாஜக சார்பில் 28 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்.

வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு, எல்லா இடத்திலும் தெருவிளக்குகள், பெண்களுக்கான பிங்க் டாய்லெட், தெருவிலங்குகளுக்கான பாதுகாப்பறை, சுதந்திரப்போராட்ட வீர்ர்களின் குடும்பத்திற்கு வீட்டு வரி விலக்கு, முறையான பேருந்து வசதி, சுத்தமான சுற்றுச்சூழல் என்று இந்த லிஸ்ட் நீள்கிறது. கழிப்பறை கட்ட 20ஆயிரம் ரூபாய் மாநில அரசின் சார்பில் தரப்படும் என்ற அறிவிப்பும் இதில் இடம்பெற்றிருக்கிறது.

‘மின்சார பகிர்மானம் பற்றிய சரியான அளவீடுக்காக, மின் இணைப்பு இல்லாத இடங்களிலும் மின்சாரம் வழங்கப்படும். இது தற்போது மாநிலத்தின் எல்லா பகுதிகளிலும் தீவிரமாகச் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் மின் திருட்டு தவிர்க்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறார் ஆதித்யநாத்.

இது மட்டுமல்லாமல், உ.பி. முழுவதும் பல்வேறு கைவினைத்தொழில்கள் செய்யப்படுகிறது. இதனை முன்வைத்து ‘ஒரு மாவட்டம், ஒரு பொருள்’ என்ற திட்டத்தையும் அறிவித்திருக்கிறார். ”இதன் மூலம் வேலைவாய்ப்புகள் புதிதாக மலரும். அதோடு, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு தன்னிறைவு பொருளாதாரத்தை அடையும்” என்றிருக்கிறார்.

கடந்த தேர்தலில் 12 ஆக இருந்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை, தற்போது 16 ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ’மாநகராட்சி உட்பட மாநிலமெங்குமுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றிபெறுவோம்’ என்ற நம்பிக்கையுடன் சுற்றிச்சுழன்று வேலை செய்துவருகிறது பாஜக தரப்பு. உத்தரபிரதேச சட்டப்பேரவையில் பாஜக ஆட்சி அமைந்தபிறகு நடக்கும் மாநிலம் தழுவிய தேர்தல் இது. எனவே, யோகி ஆதித்யநாத்தின் சமீபத்திய நடவடிக்கைகளுக்கான எதிர்வினையாக இந்த தேர்தல் முடிவுகள் அமையும்.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon