மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

பிரதியுமான் வழக்கு : காவல்துறையிடம் சிபிஐ விசாரணை!

பிரதியுமான் வழக்கு : காவல்துறையிடம் சிபிஐ விசாரணை!

பிரதியுமான் கொலை வழக்கில் நடத்துநரைக் கைது செய்தது குறித்து காவல்துறையிடம் சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது.

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்த வந்த பிரதியுமான்(7) என்ற சிறுவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாகப் பள்ளி பேருந்து நடத்துநர் அசோக் குமாரை போலீசார் கைது செய்தனர்.அசோக் குமார் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் அறிவித்தனர்.

இதற்கிடையே சிறுவன் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்படவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

சிபிஐ விசாரணையில் இவ்வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அதில் பேருந்து நடத்துநருக்கு எதிர்மறையாகத் தகவல்கள் திரண்டன. பள்ளியில் இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்து கொலை வழக்கில் தொடர்புள்ளதாக கூறி அப்பள்ளியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பிரதியுமானை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட மாணவனை பரீதாபாத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பச் சிறார் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வரும் 22ஆம் தேதி வரை அங்கு தங்க வைக்கும்படி நீதிமன்றம் தெரிவித்தது.

இதனிடையே நடத்துநரின் குடும்பத்தினரும் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறி புகார் அளித்தனர் இந்நிலையில் பேருந்து நடத்துநரை ஏன் குற்றவாளியாக்க முயற்சி நடந்தது என்பது குறித்து ஹரியானா காவல்துறையைச் சேர்ந்த 4 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இன்று (நவம்பர் 13) முதல்கட்ட விசாரணை நடத்தப்படவுள்ளது.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon