மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

இனி மொபைல் பரிவர்த்தனையே!

இனி  மொபைல் பரிவர்த்தனையே!

இனி வரும் காலங்களில் பணப் பரிவர்த்தனை குறைந்து மொபைல் பரிவர்த்தனை அதிகரிக்கும் என்று கூறியிருக்கிறார் நிதி ஆயோக் அமைப்பின் தலைவர் அமிதாப் காந்த்.

மத்திய திட்ட கமிஷனுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ளது நிதி ஆயோக் அமைப்பு. இது மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாக விளங்கிவருகிறது. இந்த அமைப்பின் தலைவர் (சிஇஒ) அமிதாப் காந்த், நேற்று (12.11.2017) நொய்டாவில் நடந்த பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

“நமது நாட்டின் மக்கள் தொகையில் 72 சதவீதத்தினர், 32 வயதுக்குக் கீழே உள்ளவர்கள். மேலும் இந்திய மக்கள் தொகை 2040-ம் ஆண்டு வரையில் இளமையாகிக் கொண்டே போகும். இது அமெரிக்கா, ஐரோப்பாவுடன் ஒப்பிடுகையில் நமக்கு மிகவும் சாதகமான அம்சம். இந்திய இளைஞர்கள் நவீன தொழில் நுட்பங்களைக் கையாள்வதில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். இதனால், அடுத்த நான்கு ஆண்டுகளில் கிரெடிட், டெபிட் கார்டுகளின் பயன்பாடு குறைக்கப்படும். தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்கள் பயன்பாடு மிகவும் குறைந்துவிடும். அதன் பிறகு தேவையற்ற ஏடிஎம்கள் கண்டறியப்பட்டு அவற்றின் எண்ணிக்கை குறைக்கப்படும்” என்று அந்த நிகழ்ச்சியில் பேசும்போது அமிதாப் காந்த் குறிப்பிட்டார்.

எந்தவொரு பண பரிமாற்றத்துக்கும் நாம் செல்போன்களை பயன்படுத்தத் தொடங்கிவிடுவோம். உலகிலேயே நமது நாட்டில்தான் 100 கோடி பயோமெட்ரிக், அவ்வளவு அதிகமான மொபைல் போன்கள், வங்கிக் கணக்குகள், உள்ளன. கூடுதலான பணப் பரிமாற்றங்கள் செல்போன் வழியாக நடைபெறும். இப்போதே இந்தப் போக்கு அதிரடியாக அதிகரித்துவருகிறது. பணப் பரிவத்தனையைக் குறைத்து மொபைல் பண பரிவர்த்தனைக்கு நாம் அனைவரும் மாற வேண்டும் என்றார் அமிதாப் காந்த்.

“இந்தியா ஆண்டுக்கு 7½ சதவீத வளர்ச்சியைக் கண்டு வருகிறது. ஆனால் 9 முதல் 10 சதவீத வளர்ச்சி அடைவதே நமக்குச் சவால்” என்று அவர் கூறினார்.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon