மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

முடிந்தும் முடியாத ரெய்டு!

முடிந்தும் முடியாத ரெய்டு!

சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகளில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நான்கு நாள்களாக நீடித்துவந்த நிலையில் நேற்றிரவு விவேக் வீடு உள்ளிட்ட பல இடங்களில் முடிவடைந்தது.

சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரின் வீடு மற்றும் அலுவலகங்களை குறிவைத்து கடந்த 9ஆம் தேதி அதிகாலை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தத் தொடங்கினர். முதல் நாள் 190 இடங்கள், முந்நூறுக்கும் மேற்பட்ட வாகனங்களுடன், 1,800 அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட ஆரம்பித்தனர். தினகரன் வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது, அவர் கூலாக கோமாதா பூஜையில் ஈடுபட்டிருந்தார்.

முதல்நாள் ரெய்டில் ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர் அலுவலகம், ஜாஸ் சினிமாஸ், ஜெயா டி.வி தலைமை செயல் அதிகாரி விவேகின் மகாலிங்கபுரம் இல்லம், அவரது சகோதரி கிருஷ்ணப்பிரியா இல்லம், விவேக் மாமனார் பாஸ்கரன் இல்லம், நாமக்கல்லிலுள்ள சசிகலா வழக்கறிஞர் செந்தில்குமார் வீடு, கடலூர் ஜோதிடர் சந்திரசேகர் வீடு, திவாகரனின் சுந்தரக்கோட்டை இல்லம், அவரது கல்லூரி, போயஸ் கார்டனிலுள்ள பழைய ஜெயா டி.வி அலுவலகம், தங்க.தமிழ்செல்வன் உதவியாளர் இல்லம், பெங்களூருவிலுள்ள புகழேந்தி இல்லம், கொடநாடு எஸ்டேட், அங்கு மரவேலை செய்த சஜீவன் இல்லம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

இரண்டாவது நாளில் 147 இடங்களில் சோதனை நடைபெற்றது. சோதனையில் பல்வேறு ஆவணங்களும், நகைகளும் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் நமது எம்.ஜி.ஆர் அலுவலகம், ஜெயா டி.வி அலுவலகம், விவேக் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை தொடர்ந்துகொண்டே இருந்தது.

இந்தச் சூழ்நிலையில் கடலூரில் தினகரனின் ஜோதிடர் சந்திரசேகர் இல்லத்தில் நடைபெற்றுவந்த சோதனை முடிவுற்ற நிலையில், சந்திரசேகரை வரும் 20ஆம் தேதி புதுச்சேரி வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கொட்டிவாக்கத்தில் சசிகலா உறவினர் மருத்துவர் வெங்கடேஷ் இல்லத்தில் நடைபெற்ற சோதனையும் முடிவடைந்துள்ளது.

சோதனை முடிவுற்ற நிலையில் திவாகரனுக்குச் சொந்தமான செங்கமலத்தாயர் கல்லூரியின் ஓர் அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. விவேக் வீட்டிலும் நேற்று வருமான வரித்துறையின் சோதனை முடிந்தது. அதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கொடநாடு எஸ்டேட்டில் நாளையும் சோதனை நடைபெறும் என்ற வருமான வரித்துறை வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. 190 இடங்களில் நடத்தத் தொடங்கிய சோதனை தற்போது பல இடங்களில் நிறைவடைந்துள்ள நிலையில், சோதனை நடைபெற்ற வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்புவது, விசாரணை, ஆவணங்களைச் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளை அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என்பதால் சோதனை முடிந்தும் முடியாத நிலையில்தான் உள்ளது.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon