மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

இந்திய அணியைக் காப்பாற்றிய சதம்!

இந்திய அணியைக் காப்பாற்றிய சதம்!

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தலா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாட உள்ளது. நவம்பர் 16ஆம் தேதி தொடங்க உள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இலங்கை அணி, இந்தியன் போர்டு பிரெசிடெண்ட்ஸ் அணியுடன் இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது.

நேற்று முன்தினம் (நவம்பர் 11) தொடங்கிய பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியன் போர்டு பிரெசிடெண்ட்ஸ் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி, இந்தியன் போர்டு பிரெசிடெண்ட்ஸ் அணியினர் பந்து வீச்சை எளிமையாகச் சமாளித்து ரன் குவிக்க தொடங்கினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 411 ரன்களை சேர்த்து டிகளர் செய்தது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது மற்றும் கடைசி நாளான நேற்று (நவம்பர் 12) இந்தியன் போர்டு பிரெசிடெண்ட்ஸ் அணி பேட்டிங்கைத் தொடர்ந்தது. தொடக்கம் முதலே இந்தியன் போர்டு பிரெசிடெண்ட்ஸ் அணி வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். முதல் 30 ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தவித்தது. அதன்பின்னர் களமிறங்கிய சஞ்சு சாம்சன், ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் நிலைத்து நின்று விளையாடி அணியைச் சரிவில் இருந்து மீட்டு வந்தார்.

அவர் 128 ரன்களைச் சேர்த்து சமரவிக்ரமா பந்தில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. எனவே பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. சஞ்சு சாம்சன் சதம் இந்தியன் போர்டு பிரெசிடெண்ட்ஸ் அணியைத் தோல்வியிலிருந்து மீட்டது.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon