மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

கடல் அரிப்பைத் தடுக்க புதிய முயற்சி!

கடல் அரிப்பைத் தடுக்க  புதிய முயற்சி!

தனுஷ்கோடி கடல் பகுதியில் கடல் அரிப்பால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நிலப் பகுதிகளைப் பாதுகாக்கும் வகையில் 10 ஆயிரம் பனை மர விதைகள் நடப்பட்டு வருகின்றன.

நாட்டின் மிகச் சிறந்த துறைமுக நகரங்களில் ஒன்றாக விளங்கியது தனுஷ்கோடி. 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப் பேரலையினால் கடலில் மூழ்கி, மனிதர்கள் வாழத் தகுதியற்ற பகுதியாக மாறியது. ஆனாலும் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்காகவும், புயலில் மிஞ்சிய கட்டட இடிபாடுகளைக் காண்பதற்காக சுற்றுலாப் பயணிகளும் தனுஷ்கோடி பகுதிக்குச் சென்று வருகின்றனர். 53 ஆண்டுகளுக்கு முன் துண்டிக்கப்பட்ட தனுஷ்கோடிக்கான சாலை வசதி கடந்த ஜூலை மாதம் மீண்டும் ஏற்படுத்தப்பட்டது.

நாட்டின் பாதுகாப்பு கருதி அது தொடர்பான நடவடிக்கைகளுக்காகவும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்திரைவாசிகள் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதி வரை வாகனங்களில் எளிதாகச் சென்று திரும்பும் வகையில் ரூ.59 கோடி செலவில் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டு பிரதமர் மோடி அதைத் திறந்து வைத்தார். இந்த நிலையில் கடல் சீற்றத்தினால் இந்தச் சாலை பயன்பாட்டுக்கு வரும் முன்னரே சேதமடைந்தது. இதைச் சீரமைக்க 12 கோடி ரூபாய் செலவில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும், தனுஷ்கோடி சாலை மற்றும் நிலப்பரப்புகளைக் கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்கும் வகையில் இயற்கையான தடுப்புகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தனுஷ்கோடி சாலையின் இருபுறங்களிலும் இயற்கை தடுப்பான பனை மரங்களை வளர்க்க மாவட்ட ஆட்சியர் நடராஜன் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, ராமேஸ்வரம் நகராட்சியின் சார்பில் ராமகிருஷ்ணபுரம் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதி வரை சாலையின் இரு புறங்களிலும் 10 ஆயிரம் பனை மர விதைகளை நடும் பணியினை சுகாதார ஆய்வாளர் ஐயப்பன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் நேற்று (நவம்பர் 12) தொடங்கினர். தண்ணீரோ, பராமரிப்போ தேவையன்றி வளரும் பனைமரங்கள், இப்பகுதியில் வளர்வதன் மூலம் கடல் அரிப்புகளில் இருந்து தனுஷ்கோடி சாலைக்கு நிரந்தரப் பாதுகாப்பு கிடைக்கும் என்று நகராட்சி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon