மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

வரிக் குறைப்பை வரவேற்கும் நிறுவனங்கள்!

வரிக் குறைப்பை வரவேற்கும் நிறுவனங்கள்!

மக்கள் அன்றாட வாழ்வுக்குப் பயன்படும் சுமார் 200 பொருள்களுக்கான வரி விகிதங்களை ஜி.எஸ்.டி. கவுன்சில் குறைத்துள்ளது. இந்த நடவடிக்கையை நுகர்பொருள் உற்பத்தி நிறுவனங்களான இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், பதஞ்சலி போன்றவை வரவேற்றுள்ளன. மேலும் வரிக் குறைப்பின் பலன்கள் நுகர்வோர்க்கு வழங்கப்படும் என்றும் இந்நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.

நவம்பர் 10ஆம் தேதியன்று நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சாக்லேட், அழகுசாதனப் பொருட்கள், கைக்கடிகாரம் உள்ளிட்ட சுமார் 200 நுகர்பொருள்களுக்கான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. இதில், 28 சதவிகித வரி விதிக்கப்பட்டிருந்த 178 பொருள்களுக்கான வரி விகிதம் 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது.

பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான பாலகிருஷ்ணா பி.டி.ஐ. செய்தித்தளத்திடம் பேசுகையில், “இது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கை. இதனால் பெருந்திரளான மக்கள் பயனடைவர். சோப்பு, சலவை சோப்பு, பற்பசை, ஷாம்பூ போன்ற பொருள்கள் ஏழைகள், பணக்காரர்கள் என அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்படுகிறது” என்று கூறினார்.

இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் பேசுகையில், “இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்க ஒன்று. இதனால் நுகர்வோர் பயனடைவர். இதன் மொத்தப் பலன்களை நுகர்வோர்க்கு வழங்குவதில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் மகிழ்ச்சியடையும்” என்று கூறினார்.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon