மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

குணம் திகழ் கொண்டல்!

 குணம் திகழ் கொண்டல்!

பெரிய பெருமாள் என்னும் கடலில் இருந்து ஆழ்வார்களாகிய மேகங்கள் நீரை உறிஞ்சி, அதை பூர்வாச்சாரியர்கள் என்னும் மலைமேல் சொரிய, அது ஆச்சாரியர்களான அருவிகள் வழியே எம்பெருமானார் என்னும் ஏரிக்கு வருகின்றது. எம்பெருமானார் என்ற ஏரியில் இருந்து தண்ணீர் மதகுகள் என்ற சிம்மாசனாதிபதிகள், சிஷ்யர்கள் மூலமாக மக்களுக்குச் செல்கிறது.

அதாவது கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் என்று இன்று சொல்கிறோமே... உண்மையிலேயே ராமானுஜரின் வாழ்வே கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் போன்றதுதான் என்று ராமானுஜரைப் பற்றி எம்பார், பராசர பட்டருக்குச் சொல்கிறார்.

கடல்நீரை மேகம் உறிஞ்சி அது மழையாகி மலையில் கொட்டி, அது அருவியாகி ஆறாகி ஏரியில் வந்து தேங்கி அதன் பின்னே மக்களுக்குப் பயன் விளைவிக்கிறது என்பது இயற்கையின் படிநிலை. இதுவே உயிர்களை உய்விக்கும் இயற்கையின் படி நிலை.

இந்தப் படிநிலையைதான் வைணவம் தனக்கான படி நிலையாகவும் எடுத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரம் ராமானுஜரை ஏரியாக பார்ப்பதை திருவரங்கத்தமுதனார் ஏற்காமல் இன்னும் ஒரு கோணத்தில் சிந்திக்கிறார்.

அதாவது கடல், மேகம், மழை, மலை, அருவி, ஏரி... அதன் பின் மக்கள் என்பதே படி நிலை. இதில் ராமானுஜரை ஏரியாக பார்த்தனர் எம்பார் போன்ற ஆசாரியர்கள்.

அதேநேரம் ராமானுஜ நூற்றந்தாதியை படைத்த திருவரங்கத்து அமுதனாரோ ராமானுஜரை மேகமாகவே பார்க்கிறார். ஆம்.

இதோ திருவரங்கத்து அமுதனாரின் பாடல்...

உணர்ந்தமெய்ஞ் ஞானியர் யோகந் தொறும்,திரு வாய்மொழியின்

மணந்தரும் இன்னிசை மன்னும் இடந்தொறும் மாமலராள்

புணர்ந்தபொன் மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும்

குணந்திகழ் கொண்டல் இராமானுசனெங் குலக்கொழுந்தே.

ராமானுஜர் எங்கே இருப்பார? கற்றுணர்ந்த ஞானிகள் கூட்டத்திலே, திருவாய்மொழி எங்கெல்லாம் ஒலித்து மணம் பரப்புகிறதோ, திருமகளைத் தன் மார்பில் தாங்கிய திருமால் எழுந்தருளியிருக்கும் திருத்தலங்களில் எல்லாம்...எங்கள் குலத்துக்குத் தலைவனான குண நலன்கள் நிறைந்த மேகம் போன்ற எங்கள் ராமானுஜர் இருப்பார் - என்று சொல்கிறார் திருவரங்கத்து அமுதனார்.

ராமானுச நூற்றந்தாதி என்ற இந்த 108 பாசுரங்கள் இல்லையென்றால் நாலாயிர திவ்ய பிரபந்தம் என்பது கிடையாது. இந்த 108 பாசுரங்களை சேர்த்தால்தான் அது நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகும். இப்படி திருவரங்கனே விரும்பி இசைக்கச் சொல்லி கேட்ட ராமானுச நூற்றந்தாதியில் ராமானுஜரை மேகம் என்று குறிப்பிடுகிறார் திருவரங்கத்து அமுதனார்.

ராமானுஜரை மேகம் என்று வர்ணிக்கிறார் அரங்கத்து அமுதனார். அதற்கு அற்புதமான விளக்க மழை பொழிந்திருக்கிறார் அன்னங்கராச்சாரியார்.

அவரது மேகப் பொழிவைக் கொஞ்சம் பார்ப்போம்

‘’மேகமானது சகல தேசங்களிலும் உள்ள சகல பிராணிகளையும் பாதுகாக்கக் கடமைப்பட்டது ஆகையால், ஆகாசப் பரப்பு எங்கும் சஞ்சரிக்கும். அதேபோலத்தான் சுவாமி ராமானுஜரும் சகல தேசங்களிலுமுள்ள சகல ஆத்மாக்களையும் பாதுகாக்கும் பொறுப்புள்ளவர் ஆகிறார். அதனால் தென்னாட்டிலும் வடநாட்டிலும் சகல பாகங்களிலும் சஞ்சரித்து செழித்தோங்கி வளரச் செய்தார்.

கடலில் உள்ள நீரானது உப்பு நீராகையால் நம்மால் அதை நேரடியாக உபயோகப்படுத்த முடியாது. ஆனால் அதே நீர் மேகத்தின் வழியாக நமக்கு வரும்போது பரம சுத்தமாக இருக்கும். எனவே மேகமானது

கடலில் இருக்கும் உப்பு நீரைத் தானுறிஞ்சி அதை மக்கள் பயன்படுத்தும் வண்ணம் குடிநீராக மாற்றித் தரும் பண்புகொண்டது.

அதேபோல சாஸ்திரங்களில் உள்ள கருத்துகளை நாம் நேரடியாகப் பார்த்தோம் என்றால் அது நமக்கு இனிமையாக இருக்க மாட்டாது. அவற்றையே ராமானுஜரின் வேதாந்த சங்கரஹம், ஸ்ரீ பாஷ்யம் போன்ற உரைகளின் வழியாக அவற்றைக் கொள்வோமாயின் அவை நமக்கு பரம பயன்பாடு கொண்டதாக எளிதில் புரியும்படி இருக்கும்.

மேகமானது ஒருத்தருடையதோ சிலருடைய வேண்டுகோளுக்கு என்று இல்லாமல் இயல்பாகவே இந்த உலகுக்கு உதவி செய்வதை வேலையாகக் கொண்டது. அதுபோல ராமானுஜர் பிற ஆச்சாரியர்கள் போல் அல்லாமல்... தன்னிடம் கேட்டவர் கேட்காதவர் எல்லாரும் மோட்சத்துக்கு செல்ல வேண்டும் என்றும் அதற்கான உபதேசங்களை அனைவருக்கும் பொதுவாக வைத்தவர்.

மேகமானது கடல் நீரை உறிஞ்சிதான் மழை பொழிகிறது. ஆனால், அந்த மழை கடலிலும் பெய்யும். அதுபோல ராமானுஜர் திருவாய்மொழி பாசுரங்களுக்கான விளக்கத்தை திருமாலையாண்டானிடம் இருந்து கற்றார். ஆனபோதும் தான் யாரிடம் இருந்து திருவாய்மொழியை கற்றாரோ அவருக்கே திருவாய்மொழி வியாக்யானத்தை செய்தவர் ராமானுஜர்’

இப்படியெல்லாம் ராமானுஜருக்கும் மேகத்துக்கும் உண்டான ஒற்றுமையை விளக்குகிறார் அன்னங்கராச்சாரியார். எவ்வளவு அழகிய உவமைகள்!

ராமானுஜர் என்னும் மேகம் பெய்த மழையால் தமிழ் கூறும் உலகம் எங்கும் தழைத்த வைணவப் பசுமையை தன்னால் இயன்ற அளவு தழைக்க வைத்துக் கொண்டிருக்கிறார் ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவனர் வைணவச் செம்மல் ஜெகத்ரட்சகன்.

ஆழ்வார்கள் ஆய்வு மையம் வளரட்டும்... ராமானுஜர் புகழ் ஓங்கட்டும்!

விளம்பர பகுதி

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon