மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

சபாநாயகருக்கு கபில் சிபல் வைத்த கேள்விகள்!

சபாநாயகருக்கு கபில் சிபல் வைத்த கேள்விகள்!

தமிழ்நாடு சட்டமன்றம் தொடர்பாக இன்று (அக்டோபர் 12) இரு முக்கிய வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அதில் திமுக கொறடா சக்கரபாணி தொடுத்த, வழக்கில் சபாநாயகர் தரப்புக்கு சரமாரியான கேள்விகளை முன்வைத்திருக்கிறார் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்.

சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டுவந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 21 திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து ஸ்டாலின் தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் பதிலளிப்பதற்கு அவகாசம் வேண்டுமாறு சட்டப்பேரவை செயலாளர், உரிமைக் குழுத் தலைவர் ஆகியோர் தரப்பில் நீதிபதியிடம் கோரப்பட்டது. இதை ஏற்று நீதிபதி ரவிச்சந்திரபாபு வழக்கை அக்டோபர் 27க்கு ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி நம்பிகை வாக்கெடுப்பு கோரியபோது ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசை எதிர்த்து வாக்களித்த விவகாரத்தில் அவர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சக்கரபாணி தொடுத்த வழக்கும் இன்று நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையில் சபாநாயகர் தரப்பைக் கேள்விகளால் திணறடித்தார் சக்கரபாணி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்.

இந்த வழக்கையும் ஒத்தி வைக்க வேண்டும் என்றும், சபாநாயகர் பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட, இதை எதிர்த்து கபில் சிபல் வாதாடினார்.

“இந்த வழக்கில் ஏற்கனவே நீதிமன்றம் சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. எங்களையும் சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பச் சொன்னீர்கள். ஆனால் நாங்கள் அனுப்பிய நோட்டீசை சபாநாயகர் வாங்க மறுத்துவிட்டார். அவருக்கு நோட்டீஸ் என்றாலே அலர்ஜிபோல.

நாங்கள் கொடுக்கும் நோட்டீசை வாங்க மறுக்கும் சபாநாயகர், ஓ.பன்னீர் தரப்புக்கு மட்டும் நோட்டீஸ் வழங்க மறுத்துவருகிறார். ஜனநாயகத்தில் எண்ணிக்கை என்பது முக்கியம்தான். ஆனால், பெரும்பான்மைக்காக அந்த எண்ணிக்கையைக் குயுக்தியான முறையில் கொண்டு வருவது ஜனநாயகம் அல்ல.

சபாநாயகர் இந்த வழக்கைத் தள்ளிப் போடுவதற்கே முயற்சி செய்கிறார். என்னைப் பொறுத்தவரை இந்த அரசு நிலைக்கத் தக்கது அல்ல. காரணம் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருப்பதற்கே தகுதியற்றவர்கள் இந்த அரசின் துணை முதல்வராகவும் (ஓ.பன்னீர்), அமைச்சராகவும் (மாஃபா பாண்டியராஜன்) இருக்கிறார்கள். எனவே இதில் நீதிமன்றம் தலையிட வேண்டும்.

நான் சபாநாயகருக்குச் சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறேன்.

1. பிப்ரவரி 18- 2017 அன்று சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு அரசு கொறடா உத்தரவிட்டாரா இல்லையா?

2. அரசு கொறடாவின் உத்தரவை மீறி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தார்களா இல்லையா?

3. அரசுக்கு எதிராக வாக்களித்த அந்த 11 உறுப்பினர்களையும் கட்சித் தலைமை 15 நாட்களுக்குள் மன்னித்ததா?

4. மார்ச் 30- 2017 அன்று, அரசுக்கு எதிராக வாக்களித்த 11 உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு 6 சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் புகார் அளித்தார்களே.. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

இந்த 4 கேள்விகளுக்கும் சபாநாயகர் தரப்பு பதில் சொல்ல வேண்டும்’’ என்று தனது வாதங்களை முன் வைத்த கபில் சிபல் தொடர்ந்தார்.

“இந்த நீதிமன்றத்துக்கு ராஜேந்திர சிங் ரானா வழக்கை நினைவுபடுத்த விரும்புகிறேன். இதேபோன்ற சூழல் அந்த வழக்கில் இருந்த நிலையில் 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு என்ன சொன்னது தெரியுமா? ‘குறிப்பிட்ட அந்த உறுப்பினர்கள் ஒரே ஒரு நாள்கூடப் பதவியில் இருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது’ என்று கூறியது நீதிமன்றம். அந்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புக்கு இணங்க இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும்’’ என்று தனது வாதத்தை நிறைவு செய்தார் கபில் சிபல்.

அப்போது சபாநாயகர் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், பதிலளிக்க அவகாசம் கேட்டார்.

“அவர்கள் அனுப்பிய நோட்டீஸை நீங்கள் ஏன் வாங்கவில்லை’’ என்று நீதிபதி கேட்டார். ஆனால் அரசுத் தரப்போ அவகாசம் கேட்பதையே வலியுறுத்தியது. அதையடுத்து, வழக்கை அக்டோபர் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி ரவிச்சந்திரபாபு.

வியாழன், 12 அக் 2017

அடுத்ததுchevronRight icon