மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

டிஜிட்டல் திண்ணை: 'யாருகிட்டயும் பேசாதீங்க...’ எடப்பாடியின் திடீர் உத்தரவு!

டிஜிட்டல் திண்ணை: 'யாருகிட்டயும் பேசாதீங்க...’ எடப்பாடியின்  திடீர்  உத்தரவு!

மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்கு போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.

“நேற்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடந்தது எல்லோருக்கும் தெரியும். அதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வுக்கான முடிவு எடுக்கப்பட்டது. அத்துடன் மதுபானங்களின் விலையேற்றம் தொடர்பான முடிவுகளும் எடுக்கப்பட்டது. இப்படியான அலுவல் ரீதியான கூட்டம் முடிந்ததும், எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களிடம் சில நிமிடங்கள் பேசி இருக்கிறார்.

‘அம்மா இருந்தவரைக்கும் நாம யாரும் எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுத்தது கிடையாது. யாரும் எந்த மீடியாவுக்கும் பேசியதும் கிடையாது. ஆனால், அம்மா மறைவுக்குப் பிறகு இப்போ எல்லோருமே அவங்களுக்கு தோன்றியதை பேசுறோம். மீடியாவிடம் எல்லோருமே நீங்க நினைச்ச விஷயத்தை சொல்லிடுறீங்க. இதை நான் தப்பா சொல்லவில்லை. எல்லோருக்கும் எல்லாம் பேசுறதுக்கு சுதந்திரம் இருக்கு.

ரெண்டு நாளைக்கு முன்னாடி செல்லூர் ராஜு அண்ணன் அவரோட மனசுல பட்டதை எதேச்சையாக சொல்லப்போக அது, பெரிய விஷயமாகிடுச்சு. நாம யாருமே மனசுல ஒண்ணு வெச்சு, வெளியில ஒண்ணும் பேசுவது கிடையாது. இங்கே அதுதான் பிரச்னை ஆகிடுது. கட்சியில ஸ்போக்ஸ்பர்சன் என நிறைய பேரு இருக்காங்க. அவங்க எதைச் சொன்னாலும் பிரச்னை இல்லை. ஆனால், அமைச்சர்களாக இருப்பவர்கள் எது சொன்னாலும் அது பிரச்னையில் வந்து முடியுது.

நானும் ஓ.பி.எஸ். அண்ணனும் பேசி சில முடிவுகளை எடுத்து இருக்கோம். மீடியாவுக்கு உங்களை யாரும் பேச வேண்டாம் என சொல்லவில்லை. தாராளமாக பேசுங்க. ஆனால் உங்க துறை சார்ந்த விஷயங்களை மட்டும் பேசுங்க. அதைத் தவிர்த்து கட்சி தொடர்பாகவோ, பழைய விஷயங்கள் தொடர்பாகவோ பேச வேண்டாம். அதையும் தாண்டி பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், என்கிட்டையோ அல்லது ஓபிஎஸ் அண்ணன்கிட்டையோ தகவல் சொல்லுங்க. என்ன பேசலாம் என்பதை டிஸ்கஸ் பண்ணிட்டுப் பேசுங்க.

நீங்க சொல்ற கருத்துக்களை உங்களோட சொந்தக் கருத்துக்களாக இங்கே பார்க்க மாட்டாங்க. நீங்க அதிமுகவின் பிரதிநிதியாகத்தான் பார்க்கப்படுவீங்க. இனி கட்சி தொடர்பாக எது பேச வேண்டும் என்றாலும் நானோ அல்லது ஓ.பி.எஸ் அண்ணனோ பேசுறோம். அதுதான் சரியாக இருக்கும் என நினைக்கிறோம்..’ எனப் பேசி இருக்கிறார்.

அவர் பேசி முடித்ததும் செல்லூர் ராஜு, ‘நீங்க சொல்றது சரிதாண்ணே... நான் அதைப் பேசணும்னு அங்கே போகலை. நான் டெங்கு காய்ச்சல் பத்தி பேசிட்டு இருந்தேன். மீடியாக்காரங்க திடீர்னு அந்தம்மா பத்தி கேட்டதும் நானும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டேன். எல்லோருமே அப்படித்தான் மாட்டிக்கிறோம். அப்படி மீடியாவுல இருந்து கேட்டாலும்கூட, அதற்கு பதில் சொல்லாம வந்துடணும்னு இப்போ நல்லா புரிஞ்சுகிட்டேன்’ என சொல்லி இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமியோ, ‘இது உங்களை மட்டும் குறிப்பிட்டு சொல்லலை. எல்லோருக்குமே இந்த சங்கடம் இருக்கும். அதை தவிர்க்கத்தான் இப்படி ஒரு முடிவை எடுத்துருக்கோம். நீங்க யாரும் இதை தப்பா நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. பேசுறதுக்கு முன்னாடி கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணிட்டா எல்லாம் சரியாயிடும். அவ்வளவுதான்!’ என அமைச்சர்கள் பேசுவதற்குத் தடைவிதித்துக் கூட்டத்தை முடித்திருக்கிறார் பழனிசாமி!” என்பதுதான் அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டதுடன் அதை அப்படியே ஷேரும் செய்தது வாட்ஸ் அப்.

தொடர்ந்து, மெசேஜ் ஒன்றை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது.

“இன்று நல்ல நேரம் பார்த்து வீட்டில் இருந்து கிளம்பினார் சசிகலா. பரோல் முடிந்து இன்று பெங்களூரு கிளம்புகிறார். அதிகாலையிலேயே எழுந்துவிட்ட சசிகலா, வீட்டிலேயே அரைமணி நேரத்துக்கு மேலாகப் பூஜைகளைச் செய்திருக்கிறார். ‘பரோலில் வந்து உங்க எல்லோரையும் பார்த்தது எனக்கு ரொம்பவும் சந்தோஷமா இருக்கு. ஆனால், அக்கா சமாதிக்கு போக முடியலை. கார்டனுக்குள்ளயும் கால் வைக்க முடியலை. இதையெல்லாம் நினைச்சாதான் தாங்க முடியலை...’ என்று உடைந்து அழுதிருக்கிறார். இளவரசியின் மகள்கள்தான் அவரைச் சமாதானப்படுத்தி இருக்கிறார்கள்.

நேற்று இரவு வேறு கார் ஒன்றில் ஜெயலலிதா சமாதி வரையிலாவது போய் தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு வந்துவிடலாம் என சசிகலா கேட்டதாக சொல்கிறார்கள். ஆனால், விவேக்கும், ஜெய் ஆனந்தும்தான், ‘போலீஸ் நம்மை கவனிச்சிட்டே இருக்கு. ஜெயில் ரூல்ஸ்படி நாம இப்போ நடந்துகிட்டா, திரும்ப பரோல் வாங்க வசதியாக இருக்கும். இல்லைன்னா அடுத்த முறை பரோல் கேட்டால், இதைக் காரணம் காட்டி கொடுக்க மறுத்துடுவாங்க...’ என சொல்லி அவரை சமாதானப்படுத்தினார்களாம்.

காலையில் கிளம்பும்போதும்கூட, ‘சமாதி இருக்கும் வழியில் போகலாமா’ என சசிகலா கேட்டதாக சொல்கிறார்கள். அப்போதும் விவேக்தான் சமாதானப்படுத்தி இருக்கிறார்.

வீட்டிலிருந்து வெளியே வரும்போது கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து, சசிகலா கண்களில் கண்ணீர் துளிர்த்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல், சமாளிக்கப் பார்த்து தோற்றுப்போனார். இரண்டு முறை கைக்குட்டையால் கண்களைத் துடைத்தார். ‘வரும்போது சின்னம்மாவுக்கு கொடுத்த வரவேற்பை விட இப்போ இன்னும் பலமாக இருக்கணும்’ என நேற்று மாலையிலேயே காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவு போயிருந்தது. தினகரன் வீட்டிலிருந்துதான் இந்த உத்தரவு கட்சி நிர்வாகிகளுக்குச் சொல்லப்பட்டிருந்தது.

தி.நகர் வீட்டிலிருந்து கிளம்பும்போதே பூ தூவும் படலம் தொடங்கியது. எப்படி பெங்களூருவில் இருந்து வரும்போது, ஜெயா டிவியின் லைவ் தொடங்கியதோ, இப்போதும் அப்படியே லைவ் செய்ய ஆரம்பித்தார்கள். சசிகலா பயணிக்கும் கார் மீது வழி நெடுக நின்ற பெண்கள் கையில் கூடை கூடையாக வைத்திருந்த ரோஜாப் பூக்களை உதிரியாகப் பிய்த்துத் தூவ ஆரம்பித்தனர்.

சசிகலாவின் கார் காஞ்சிபுரத்தைக் கடக்கும்போது கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. அங்கேதான் பூ தூவும் படலம் அதிகமாகவே இருந்தது. பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வரும்போது, கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து சிரித்தபடியே கும்பிட்டுக் கொண்டு வந்த சசிகலாவுக்கு, திரும்பிப் போகும்போது, அந்த சிரிப்பு மட்டும் மிஸ்ஸிங்.

சசிகலா சென்னையில் தங்கியிருந்த நாட்களில் யாரெல்லாம் அவரை சந்திக்க தி.நகர் வீட்டு வாசல் வரை வந்து போனார்கள் என்ற லிஸ்டை உளவுத் துறை எடுத்தார்களோ இல்லையோ, தினகரன் ஆதரவாளர்கள் அதைத் தெளிவாகச் செய்தார்கள். நோட்டு போட்டு, பெயர், ஊர், செல் நெம்பர் ஆகியவற்றை வாங்கிக்கொண்டார்கள். ஒவ்வொரு நாளுமே இரவு பார்க்க வந்தவர்கள் லிஸ்டை சசிகலா வாங்கிப் படித்துப் பார்த்தாராம். சசிகலா சொல்லிவிட்டுச் சென்றதையெல்லாம் அவர் சிறைக்குள் சென்ற பிறகுதான் செயல்படுத்தப் போகிறார்கள் டிடிவி அணியினர். அது என்ன என்பது இனிதான் தெரியும்!” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைனில் போனது.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon