மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

டெங்கு விழிப்புணர்வு ஆப்!

டெங்கு விழிப்புணர்வு ஆப்!

டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க புதிய ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆப், டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் அதிக அளவில் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், டெங்கு காய்ச்சல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 2016 அக்டோபர் 27ஆம் தேதி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ‘டெங்கு காய்ச்சல் தமிழ்’ (Dengue fever tamil) என்ற புதிய ஆப் அறிமுகப்படுத்தப்பட்டது. டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க இந்த மொபைல் ஆப்-பை பயன்படுத்துமாறு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை நேற்று (அக்டோபர் 11) அறிவுறுத்தியுள்ளது.

இந்த ஆப்-பை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து Dengue fever tamil என டைப் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். டெங்குவைத் தடுப்போம்! கொசுக்களை ஒழிப்போம்! எனத் தொடங்கும் பக்கத்தின் முகப்பில் கொசு உற்பத்தியாகும் இடங்கள், கேள்வி - பதில், சித்த மருத்துவம், தகவல் மற்றும் உதவி, ஆடியோ, குறும்படங்கள் என ஆறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. டெங்கு சார்ந்த தகவல்களும் தெளிவான வரைபடங்களும் இவற்றில் இடம்பெற்றுள்ளன. தண்ணீர் தேங்கி, கொசு உற்பத்தியாகும் இடங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரபலங்கள் பேசிய குறும்படங்களும் இணைக்கப்பட்டுள்ளது. நிலவேம்பு கஷாயம், மலைவேம்பு இலைச்சாறு, பப்பாளி இலை சாறு தயாரிப்பு முறை குறித்தும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

டெங்கு குறித்த கூடுதல் தகவல்களுக்கும் அவசர உதவிக்கும் தொடர்புகொள்ள வேண்டிய 104, 108 மற்றும் பொது சுகாதாரத் துறையின் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறையின் தொலைப்பேசி எண்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 5,000க்கும் மேற்பட்டோர் இந்த ஆப்-பைப் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெங்கு விழிப்புணர்வு ஆப் - Dengue fever tamil

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon