மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

சூர்யா படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்!

சூர்யா படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்!

சூர்யா நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு பொதுமக்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பாதியில் நிறுத்தப்பட்டது.

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படப்பிடிப்பு, பெஃப்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் சிறிது காலம் தடைபட்டது. செப்டம்பர் 25ஆம் தேதி முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படத்தின் பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்புக்காக திருவையாறு சென்றனர் படக் குழுவினர்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரிக்கரையில் உள்ள புஷ்ப மண்டபப் படித்துறையில் நேற்று (அக்.11) அதிகாலை முதல் திருவையாறில் 50க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் சடங்குகள் நடத்திக்கொண்டிருந்தனர். 6 மணி அளவில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படப்பிடிப்புக் குழுவினர் அங்கு வந்தனர். படப்பிடிப்பு நடப்பதால் யாரும் இங்கு வரக் கூடாது என பொதுமக்களையும் திதி கொடுக்க வந்தவர்களையும், புரோகிதர்களையும் படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் அப்புறப்படுத்தினர். புரோகிதர்களும், சடங்குகள் செய்ய வந்த மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

புஷ்பமண்டபப் படித்துறையில் படப்பிடிப்பு நடத்த ஆதீனத்தில் படப்பிடிப்புக் குழுவினர் அனுமதி பெற்றிருந்தனர். படித்துறை முழுவதும் 200க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் சூர்யா நடனமாடும் பாடல் காட்சியைப் படமாக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், சடங்குகள் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட இருபதுக்கும் மேற்பட்டோர் திருவையாறு காவல் நிலையத்தில், "எங்கள் தொழிலுக்கும், பொதுமக்களின் புண்ணிய காரியங்களுக்கும் இடையூறாகப் படப்பிடிப்பு நடக்கிறது. இங்கு சடங்குகளுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். படப்பிடிப்புக்கு அனுமதி கொடுக்கக் கூடாது. மீறினால் நாங்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் மற்றும் திருவையாறு பெரிய கோயில் நிர்வாகிகள், "படப்பிடிப்புக்கான அனுமதி பெற்றிருந்தாலும், இப்போது படப்பிடிப்பு நடத்த இயலாது. இது சடங்குகள் செய்யும் நேரம். எனவே பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல் படப்பிடிப்பை ரத்துசெய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினார். இதனையடுத்து, படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. சடங்குகள் முடிந்தபின்னர் மாலையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துவரும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், சரண்யா, கோவை சரளா, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா மற்றும் சத்யன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துவருகின்றனர். அனிருத் இசையமைத்துவரும் இப்படத்துக்கு ஒளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணா, படத்தொகுப்பு ஶ்ரீகர் பிரசாத்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon