மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

அரசு ஊழியர்களை ஏமாற்றக் கூடாது!

அரசு ஊழியர்களை ஏமாற்றக் கூடாது!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத் தொகையைத் தவணை முறையிலாவது வழங்கத் தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (அக்டோபர் 12) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

மத்திய அரசுப் பணியாளர்களுக்கான ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்த மத்திய அரசு, ஊதிய உயர்வில் எந்தப் பிரிவினருக்கும் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஊதியக் காரணி என்ற புதிய முறையைப் பயன்படுத்தியது. அதன்படி அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் 01.01.2016 அன்று வாங்கிய அடிப்படை ஊதியத்தை 2.57 என்ற காரணியால் பெருக்கி புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டது.

இதனால் தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வில் எந்த ஏற்றத்தாழ்வும் காட்டப்படவில்லை. திருத்தியமைக்கப்பட்ட ஊதிய விகிதங்களின்படி தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700 ஆகவும், அதிகபட்ச ஊதியம் ரூ.2,25,000 ஆகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அதிகபட்ச ஊதியத்தில் வெறும் 7% மட்டுமே குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய ஊதிய விகிதம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் குறைந்தபட்ச ஊதியம் என்பது அதிகபட்ச ஊதியத்தில் 8% ஆக இருந்தது.

அதேபோல், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றின் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்சத்துக்கு இடையிலான வித்தியாசமும் அதிகரித்திருக்கிறது. பொதுவாக அதிகபட்ச ஊதியத்தில் 20 விழுக்காடாவது குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட்டால்தான் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஓரளவாவது மட்டுப்படுத்த முடியும். தமிழக அரசின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச ஊதியத்தை, அதிகபட்ச ஊதியத்தில் 10 விழுக்காடாக, அதாவது ரூ.22,500 ஆக நிர்ணயிக்க வேண்டும். அதேபோல், குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை ரூ.12,000 ஆக உயர்த்த வேண்டும்.

இதற்கெல்லாம் மேலாக புதிய ஊதிய விகிதங்கள் 01.01.2016 முதல் கருத்தியல் அடிப்படையிலும், 01.10.2017 முதல் பணப்பயன் அடிப்படையிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதாவது 01.01.2016 முதல் இப்போது வரையிலான 21 மாதங்களுக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியாகும். இதற்கு முந்தைய 6 ஊதியக் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும்போதும் ஊதிய உயர்வு நிலுவை ஒரு தவணையிலோ, பல தவணையிலோ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டபோதுகூட நிலுவைத் தொகை ஒரே தவணையில் வழங்கப்பட்டது. அவ்வாறு இருக்கத் தமிழக அரசு ஊழியர்களுக்கு மட்டும் 21 மாதங்களுக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க இயலாது என்று அரசு கூறுவது எந்த வகையில் நியாயம்?

இப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் 01.01.2016 முதல் 20% இடைக்கால நிவாரணம் வழங்கும்படி தமிழக அரசை பாமக வலியுறுத்திவந்தது. 21 மாத ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க மறுப்பதன் மூலம் அரசு ஊழியர்களுக்குச் சேர வேண்டிய ரூ.26,000 கோடியை ஏமாற்றத் துடிக்கின்றனர் ஆட்சியாளர்கள். இது சிறிதும் நியாயமற்றது. எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத் தொகையைத் தவணை முறையிலாவது வழங்கத் தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon