மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

ஆருஷி கொலை: பெற்றோர் விடுதலை!

ஆருஷி கொலை: பெற்றோர் விடுதலை!

சிறுமி ஆருஷி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரை விடுதலை செய்து அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று (அக்டோபர் 12) தீர்ப்பளித்துள்ளது.

2008ஆம் ஆண்டு, மே 15ஆம் தேதி, டெல்லியை அடுத்துள்ள நொய்டா நகரில், பல் மருத்துவத் தம்பதியரான ராஜேஷ் – நூபுர் தல்வார் ஆகியோரின் மகள் ஆருஷி (14) அவர் அறையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருந்தார். வேலைக்காரர் ஹேம்ராஜ் (45) இந்தப் படுகொலையை செய்ததாக ஆருஷியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். ஆனால், அடுத்த நாள் தல்வார் வீட்டின் மொட்டை மாடியிலுள்ள தண்ணீர் தொட்டி அருகே ஹேம்ராஜ் உடல் கழுத்தறுக்கப்பட்டு அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

பிரேதப் பரிசோதனையில் மருத்துவத் தொழில் அறிந்தவர்களால் இந்த இரட்டைக் கொலைகள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், பிரேதப் பரிசோதனையில் ஆருஷி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதிலும் பல்வேறு குழப்பங்கள் நீடித்தது.

அதைத் தொடர்ந்து, தல்வார் வீட்டில் ஏற்கனவே வேலை செய்த நேபாள நாட்டைச் சேர்ந்த விஷ்ணு சர்மா என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. பின்னர் இது கெளரவக் கொலையாக இருக்கலாம் எனக் கருதி, தல்வார் தம்பதியிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். மே 23ஆம் தேதி இரட்டைக் கொலையைச் செய்ததாக ராஜேஷ் தல்வார் கைது செய்யப்பட்டார். ஆனால், அவரிடம் விசாரணை நடத்தியதில் எந்தப் பலனும் இல்லை. இந்த இரட்டைக் கொலையை யார் செய்தது என்பதை மாநில போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. துப்பு கிடைக்காமல் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜூன் 1ஆம் தேதி இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

ராஜேஷ் தல்வார் மற்றும் அவரது மனைவி நூபுர் தல்வாரிடம் இரண்டு முறை உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. ராஜேஷ் தல்வாரின் கம்பவுண்டர் கிருஷ்ணா, பக்கத்து வீட்டு வேலைக்காரர் ராஜ்குமார் மற்றும் அவரது நண்பன் விஜய் மண்டல் ஆகியோர் ஜூன் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். ஜூன் 26ஆம் தேதி இந்தக் கொலை வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏதும் இல்லை என சிபிஐ தெரிவித்தது. டிசம்பர் 29ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் விசாரணை அறிக்கையை காசியாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அதில், “ஆருஷிக்கும் ஹேம்ராஜுக்கும் இடையே முறையற்ற உறவு இருப்பதாகச் சந்தேகித்து, ஆருஷியின் பெற்றோர் இருவரையும் கொலை செய்துள்ளனர். அந்த வீடு அடுக்குமாடி குடியிருப்பு. வீட்டின் கதவு உடைக்கப்படவில்லை இந்தக் கொலைகளை வீட்டிலிருந்த அவர்கள்தான் செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் மீது குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை” எனத் தெரிவித்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் இருவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி நூபுர் தல்வார் கைது செய்யப்பட்டார். 2013ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் ஆகியோருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. இருவரும் காசியாபாத் நகரில் உள்ள தஸானா சிறையில் அடைக்கப்பட்டனர். இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.

இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.கே.மிஸ்ரா மற்றும் பி.கே.நாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கின் இறுதிக் கட்டத் தீர்ப்பை இன்று வழங்கியது. அப்போது நீதிபதிகள், “குற்றம்சாட்டப்பட்ட ராஜேஷ் தல்வார், அவரது மனைவி நூபுர் தல்வார் ஆகியோருக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்களை விடுதலை செய்கிறோம். சந்தேகத்தின் அடிப்படையில் குற்றவாளிகள் என அறிவித்துத் தண்டிக்க முடியாது” என விடுவித்து உத்தரவிட்டனர்.

அப்போதைய சிபிஐ இயக்குநர் ஏ.பி.சிங், “எங்கள் விசாரணையில் பல ஓட்டைகள் இருந்ததால் வழக்கை முடிக்க வேண்டும் எனக் கூறினோம். தற்போது அவர்களை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. தீர்ப்பில், இந்தக் கொலைகளை அவர்கள் செய்யவில்லை என்று நீதிபதிகள் கூறவில்லை. அவர்களுக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லை என்றே கூறப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினால், ஆருஷியைக் கொன்றது யார் என்னும் கேள்வி இன்னமும் உயிர்ப்போடு உள்ளது.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon