மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

ஆர்.கே. நகர் தேர்தல் தேதி!

ஆர்.கே. நகர்  தேர்தல் தேதி!

வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் சசிகலா அணி சார்பில் தினகரனும், பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனும் போட்டியிட்டனர். ஆனால் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். பிறகு அதிகளவில் பணப் பட்டுவாடா நடைபெற்றதாகக் கூறி ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதன்பிறகு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென நீதிமன்றங்களில் வழக்கும் போடப்பட்டு அவை நிலுவையில் உள்ளன. ஆனால் இடைத் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டு ஆறு மாதங்களாகியும் இடைத்தேர்தல் குறித்த எவ்வித அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் தொடுத்த பொதுநல வழக்கில், டிசம்பர் 31க்குள் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை நடத்தி முடிக்கும் என்று நம்புவதாக கடந்த மாதம் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

இந்த சூழ்நிலையில், இன்று (அக்டோபர் 12) டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி கூறுகையில்,"வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து கிட்டத்தட்ட ஓராண்டுகாலமாக, ஆர்.கே. நகர் தொகுதி காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon