மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

கொசு உற்பத்திக்குக் காரணமான 2.5 லட்சம் பேருக்கு அபராதம்!

கொசு உற்பத்திக்குக் காரணமான 2.5 லட்சம் பேருக்கு அபராதம்!

டெங்குவை பரப்பும் கொசு உற்பத்திக்குக் காரணமாக இருந்ததாகக் கூறி இரண்டரை லட்சம் பேருக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டெங்குவால் நாளுக்கு நாள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அக்டோபர் 9 வரை டெங்கு காய்ச்சலால் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 11,744 பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக அரசு நேற்று தெரிவித்தது. மேலும் டெங்குவை ஒழிக்க பல்வேறு நடவடிக்கையையும் எடுத்து வருகிறது. வீடுகள், கடைகள், ஹோட்டல்களை சுற்றிலும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சாலை ஓரங்களில் நீர் தேங்கும் படி டயர்கள், பழைய பொருட்கள், குப்பைகளை வீசக் கூடாது. அவ்வாறு, டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுவின் இனப்பெருக்கத்துக்கு காரணமாக இருப்பவர்கள் மீது அபராதம், சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து சுகாதாரத்துறை பணியாளர்கள் தமிழகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்று சென்னையிலும் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடைகள்,வீடுகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ளாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. கடந்த வாரம் புதுப்பேட்டையில் நடந்த கொசு ஒழிப்பு நடவடிக்கையின் போது 1737 பேருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (அக் 12) மீண்டும் புதுப்பேட்டையில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ,மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், தலைமையில் அதிகாரிகள் டெங்கு கொசுகள் உற்பத்தியாவதைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். டெங்குவை ஒழிக்க பொது மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன்,” வாரம்தோறும் வியாழக்கிழமை டெங்கு விழிப்புணர்வு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி சென்னையில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது கொசுவை உண்டாக்கும் வகையில் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் தேங்கிக் கிடப்பது கண்டறியப்பட்டது. எனவே தூய்மையற்ற நிலையில் இடங்களை வைத்திருந்த உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பின்னரும் குப்பைகளை அகற்றாத இரண்டரை லட்சம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் மூலம் வருவாயைப் பெறுவது அரசின் நோக்கமல்ல. இதுபோன்ற தவறுகளை மக்கள் செய்யக் கூடாது என்பதற்காகவே அபராதம் விதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

மேலும் ரூ.2000 முதல் 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறினார். இந்நிலையில் அனைத்து, மாவட்ட ஆட்சியர்களும் தொடர்ந்து 15 நாட்களுக்கு டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபடவேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். டெங்குவை ஒழிக்க மாவட்டம்தோறும் தனி குழு அமைக்க வேண்டும். இந்தத் தனிக் குழு நாள்தோறும் ஆய்வு நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தத் தேவைப்படும் மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon