மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

என் சகோதரர்களே... - ஒரு பெண்ணின் கடிதம்!

என் சகோதரர்களே... - ஒரு பெண்ணின் கடிதம்!

பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளை அதிகமாகப் பதிவு செய்யத் தொடங்கியிருக்கிறது இந்த நூற்றாண்டு. சாதி, மத, இன பேதங்களை உடைக்கும் என்று நம்பப்பட்ட சமூக வலைதளங்கள் அவற்றை வேறு விதமாக ஆட்கொண்டு, வேறு விதமான பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன.

நீங்கள் படிக்கப்போகும் இந்தக் கடிதம் ஒரு நடிகை எழுதியது. பிருத்திவிராஜுடன் ‘விமானம்’ படத்தில் நடித்திருக்கும் துர்கா எழுதியிருக்கும் இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் தன்னைப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்த ஒருவரின் செயலால் உருவானது.

நான் கோழிக்கூடில் வசிக்கும் துர்கா கிருஷ்ணா. என் சகோதர சகோதரிகளே நான் உங்களில் ஒருத்தி. உங்களில் யார் உண்மையான சகோதரன், யார் நரித்தனம் கொண்டவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியாமல் இருப்பது சோகமான ஒன்று. பகலில் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொண்டு, இரவில் தங்கள் உண்மை சொரூபத்தைக் காட்டும் இவர்களிடமிருந்து எப்படித் தப்பிக்க முடியும். தங்களது இரை மனைவியா, சகோதரியா, அம்மாவா, இரண்டு வயது கொண்டவரா, எழுபது வயது உடையவரா என்றெல்லாம் இந்த நரிகள் பார்ப்பதில்லை. அவர்களிடம் இருக்கும் கயமைத்தனத்தையும், வீணான எண்ணங்களையும், ஃபோட்டோக்களையும், வீடியோக்களையும் இறக்கி வைக்க ஒரு எதிர்ப் பாலினம் மட்டுமே இவர்களுக்குத் தேவைப்படுகிறது.

எனக்குக் கடந்த இரவு ஏற்பட்ட ஒரு மோசமான சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இங்கு ஒரு வக்கிரமானவன் இருக்கிறான். கீழ்த்தரமான நடத்தையும் உச்சத்தில் இருக்கும் அவன் நேற்று என் இன்பாக்ஸில் செய்த வேலையை உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன். அவனுக்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்றுதான். வலிமையான புத்தியையும், உலகில் சிறந்த சகோதர, சகோதரிகளையும் பெற்றிருக்கும் பெண் நான். என்னை மோசமான மனநிலைக்கு அனுப்ப உங்களால் முடியாது. என்னைத் தொந்தரவு செய்ய உங்களால் முடியாது. நான் உண்மையான ஆண்களை; தைரியமானவர்களை, அன்பானவர்களை நடனம், நடிப்பு ஆகிய என் தொழில்களில் பார்த்திருக்கிறேன். எனவே, உங்களை மாதிரியானவர்களை என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியும். நான் பெண்ணியவாதிகளைப் போல அல்ல. ஆனால், வலுவான முதுகெலும்பும், அன்பான குடும்பமும், நம்பிக்கையான நண்பர்களையும் கொண்டவள்.

என் சகோதரர்களுக்குச் சிறிய கோரிக்கை வைக்கிறேன். உங்கள் சகோதரிகளான எங்களுக்கு, நீங்கள் இளம் பருவத்தில் எப்படிப்பட்ட மோசமான சூழ்நிலைகளை கடந்து வருகிறீர்கள் என்று தெரியும். ஆனால், உங்களது தங்கைகளை இதுபோன்ற சைக்கோக்களிடமிருந்தும், வக்கிர புத்தியுடையவர்களிடமிருந்தும் காப்பாற்ற வேண்டுமென்று நினைத்தால், செயல்பட இதுவே சரியான தருணம். கேரள அரசாங்கத்தில் பெண்களுக்கெதிரான கொடுமைகளைத் தடுக்க விரும்பும் அரசாங்கம் இருக்கிறது. அவர்களிடம் இதுபோன்றவர்களை வெளிச்சப்படுத்திக் காட்ட வேண்டிய முயற்சிகளை எடுங்கள். நமது அடிப்படைக் கல்வியிலிருந்து இதற்கான விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே இவற்றைத் தடுக்க முடியும். இன்று நாம் கொண்டுவரும் மாற்றம் நாளை இதுபோன்று பாதிக்கப்பட்டவர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்கும். இது எதிர்காலத்துக்கான ஒன்று. நம் சகோதரிகளுக்கான ஒன்று.

மேலே குறிப்பிட்ட கடிதத்தை ஃபேஸ்புக் மூலமாக பதிவு செய்திருக்கும் துர்கா கிருஷ்ணா, அவருக்கு இன்பாக்ஸில் ஆபாச வீடியோக்களையும், படங்களையும் அனுப்பியவரின் அடையாளம் மற்றும் சில ஆதாரங்களையும் இணைத்திருக்கிறார். தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்தது போல, பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளைப் புதிய ஊடகங்களிலும் பலர் தொடர்ந்து நடத்திவருகின்றனர். துர்கா போன்ற பெண்கள் தங்களுக்கு ஏற்பட்டதை தைரியமாக பாதிப்பை வெளியே சொல்லத் தொடங்கியிருக்கும் சமயத்தில் பிறரும் செயல்பட்டால், எதிர்காலத்தில் பாதிக்கப்படவிருக்கும் பல பெண்களைக் காப்பாற்றலாம்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon