மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

3 லட்சம் இந்தியர்கள் ஜப்பானில் பயிற்சி!

3 லட்சம் இந்தியர்கள் ஜப்பானில் பயிற்சி!

இந்தியாவிலிருந்து சுமார் 3 லட்சம் தொழில்நுட்பப் பயிற்சியாளர்களை ஜப்பானுக்கு அனுப்பி, தொழில் சார்ந்த பயிற்சி வழங்குவதற்காக ஜப்பானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜப்பான் நாட்டுடன் தொழில்நுட்பப் பயிற்சித் திட்டத்துக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் மூலம் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் இளைஞர்கள் அங்கு சென்று மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை பயிற்சி பெற இயலும். இந்தப் பயிற்சிக்கான செலவை அங்கு ஜப்பானே ஏற்கிறது. (அத்தொகை இந்தியாவால் ஒப்பந்த அடிப்படையில் செலுத்தப்படும்.)

அங்கு பயிற்சி பெறும் 3 லட்சம் இளைஞர்களில் சுமார் 50,000 பேருக்கு ஜப்பானிலேயே வேலைவாய்ப்பு வழங்கப்படும். அங்குள்ள நிறுவனங்களில் இவர்களுக்கான தேவையைப் பொறுத்து பணி வழங்கப்படும். ஜப்பானிலிருந்து பயிற்சி பெற்று இந்தியா திரும்பும் இளைஞர்கள் இந்தியத் தொழில்நுட்பத் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்குவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 16ஆம் தேதி மூன்று நாள் பயணமாக டோக்கியோ செல்லும் தர்மேந்திர பிரதான் மேற்கூறிய ஒப்பந்தத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளார்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon