மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு!

பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு!

மத்திய, மாநில பல்கலைக்கழகங்களில் பணியாற்றும், பேராசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு 7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று (அக்.11) நடைபெற்றது. இதில், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 22 முதல் 28 சதவிகிதம் வரை அவர்களது ஊதியம் உயர்த்தப்படவுள்ளது

இதன் மூலம், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 106 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், மாநில அரசின் நிதியுதவியில் செயல்படும் 329 பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்படும் 12,912 கல்லூரிகள் போன்றவற்றில் பணியாற்றும் 7.58 லட்சம் பேர் பயனடைவர்.

2016 ஜனவரி ஒன்றாம் தேதியைக் கணக்கிட்டு இந்த உயர்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ,9,,800 கோடி கூடுதலாகச் செலவாகும். திருத்தியமைக்கப்பட்ட ஊதியங்களின்படி ரூ.10,400 முதல் ரூ.49,800 வரை ஊதிய உயர்வு இருக்கும். மாநில அரசின் நிதியுதவியில் செயல்படும் பல்கலைக்கழகங்களில், அந்தந்த மாநில அரசாங்கங்கள் ஊதிய உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் கூடுதல் செலவை மத்திய அரசே ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கை மூலம், உயர்நிலைக் கல்வியின் தரம் உயரும் என்றும் திறமையாளர்களை ஈர்த்துத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். “கல்வியாளர்களிடையே திறமையை வளர்த்தாக வேண்டும். அவர்களுக்கு நல்ல ஊதியம் வழங்குவதன் மூலம் பழைய திறமையைத் தக்க வைத்துக்கொள்ளலாம். மற்ற துறைகளில் ஊதியம் இதைவிட அதிகம். அர்ப்பணிப்பு உள்ளதால்தான் பலரும் இத்துறையில் உள்ளனர். அவர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon