மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

குழந்தையைக் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்!

குழந்தையைக் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்!

கேரளாவில் குழந்தையைக் காப்பாற்ற 350 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இணைந்து செயல்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு பகுதியைச் சேர்ந்த ஆதிவாசி இளம்பெண் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு நேற்று (அக் 11) திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரது உறவினர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குக் குழந்தை பிறந்துள்ளது.,

குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் நிமோனியா மற்றும் ஜன்னி காய்ச்சலால் குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதிய வசதி அங்கு இல்லை என்றும் 7 மணி நேரத்துக்குள் திருவனந்தபுர அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தால் மட்டுமே குழந்தையைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறியுள்ளனர்.

மன்னார்காட்டிலிருந்து திருவனந்தபுரம் செல்ல குறைந்தது பத்து மணி நேரமாகும். ஆனால் 7 மணி நேரத்தில் குழந்தையைக் கொண்டு செல்ல வேண்டும்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மருத்துவமனை வளாகத்திலேயே கதறி அழுதுள்ளனர். இதைக் கேட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளனர்.

மன்னார்காட்டிலிருந்து திருவனந்தபுரம் வரை உள்ள அனைத்து ஆம்புலன்ஸ் ஒட்டுநர்களுக்கும் வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளம் மூலம் தகவல் கொடுத்துள்ளனர். இப்படிச் சுமார் 350 பேருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இது குறித்துத் தெரிவித்துள்ளனர்.

குழந்தையை அழைத்துச் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பிறகு காலை 11.30 மணியளவில் ஆம்புலன்ஸ் புறப்பட்டுள்ளது. ஆம்புலன்சுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க மற்ற ஓட்டுநர்கள் வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். அதன்படி பத்து மணி நேர தூரத்தை 5.30 நேரத்தில் அடைந்துள்ளனர். சரியாக மாலை 5 மணிக்குத் திருவனந்தபுர மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அங்குக் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

நெகிழ்ச்சியூட்டும் இந்த மகத்தான பணியைச் செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon