மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

யோ-யோவில் தேறிய அஸ்வின்

யோ-யோவில் தேறிய அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பின்னரான அஸ்வின், ''யோ-யோ டெஸ்ட்'' எனப்படும் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். பெங்களூரில் நேற்று (அக்டோபர் 11)நடந்த இந்த தேர்வில் கலந்து கொண்ட அஸ்வின், சிறப்பாக தனது பிட்னஸை வெளிப்படுத்தினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பின்னர்களில் ஒருவரான அஸ்வின், நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தார். ஐசிசியின் தரவரிசையில் முதல் இடம், டி-20 போட்டிகளில் சிறப்பான ஆட்டம் என முழு ஃபார்மில் இருந்தார். இந்நிலையில் கோலி கேப்டன் பொறுப்பேற்ற பிறகு, இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. இதனால் சமீபகாலமாக அணியின் முக்கிய பவுலரான அஸ்வின் தேர்வுக் குழுவினரால் புறக்கணிக்கப்பட்டுவந்தார். அவருக்கு பதிலாக சாஹல், குல்தீப்பை அறிமுகப்படுத்தினர். இந்த இருவருமே தற்போது அணியில் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றனர். இந்த நிலையில் “நான் இதுவரை மிகவும் சிறப்பாக விளையாடி இருக்கிறேன், எனக்கு அணியில் விரைவிலேயே வாய்ப்பு கிடைக்கும்'' என அஸ்வின் நம்பிக்கையாகப் பேசியிருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு நடந்த யோ-யோ டெஸ்டில் வேகப்பந்துவீச்சாளர் நெஹ்ரா சிறப்பாகச் செயல்பட்டு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார். நேற்று பெங்களூரில் நடந்த இந்த டெஸ்ட்டில் தமிழக வீரர் அஸ்வினும் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றுள்ளார். இந்தத் தகவலை அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து அவர், வரவிருக்கும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon