மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

இமாச்சல், குஜராத்தில் தேர்தல் எப்போது?

இமாச்சல், குஜராத்தில் தேர்தல் எப்போது?

இமாச்சல் பிரதேசம் மற்றும் குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பான அறிவிப்பைத் தலைமை தேர்தல் ஆணையர் இன்று (அக்.12) வெளியிட்டார்.

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் விஜய் ரூபானி தலைமையிலான பாஜக ஆட்சியும், 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சல் பிரதேசத்தில் வீரபத்ர சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியும் நடைபெற்றுவருகின்றன. இந்த இரு மாநிலங்களிலும் முறையே 2018, ஜனவரி 7 மற்றும் ஜனவரி 22ம் தேதி ஆட்சி முடிவடைகிறது. இந்நிலையில், இந்த இரு மாநிலங்களிலும் எப்போது தேர்தல் நடைபெறும் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (அக்.12) அறிவித்து உள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி, இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, இமாச்சல் பிரதேசத்தில் நவம்பர் 9ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அக்டோபர் 16ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் அக்டோபர் 23ஆம் தேதியாகும். வேட்புமனுவைத் திரும்பப்பெறுவதற்கு கடைசிநாள் அக்டோபர் 26 ஆகும். நவம்பர் 9ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற பின்னர். டிசம்பர் 20ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், மாநிலம் முழுவதும் 7,521 வாக்குச்சாவடி நிலையங்கள் உள்ளதாகவும், இதில், 136 மையங்களைப் பெண்கள் நிர்வகிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. அவர்களுக்காக 200 சக்கரநாற்காலிகளை மாநில அரசு சேமித்துவைத்துள்ளது. தேர்தல் தொடர்பான அனைத்துத் தகவல்களும் உள்ளூர் மொழியில் அச்சடிக்கப்பட்ட கையேடு அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்படவுள்ளது.

ஒவ்வொரு வேட்பாளரும் தலா. ரூ. 28 லட்சம் வரை மட்டுமே தேர்தலுக்குச் செலவு செய்ய வேண்டும். தேர்தலின்போது சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வருவதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

குஜராத்திற்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் குஜராத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் போன்றவை சேதமடைந்தன. தற்போது வெள்ள சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், தேர்தல் தேதியை அறிவிக்கக் கூடுதல் அவகாசம் கேட்டு குஜராத் தலைமைச் செயலர் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, குஜராத்திற்கான தேர்தல் தேதியைப் பின்னர் அறிவிக்கலாம் எனத் தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon