மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

மாவட்ட ஆட்சியர்களுக்குப் பசுமை விருதுகள்!

மாவட்ட ஆட்சியர்களுக்குப் பசுமை விருதுகள்!

மாவட்டச் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகச் சிறப்பாகச் செயலாற்றிய மாவட்ட ஆட்சியாளர்களுக்கு 2014, 2015, 2016ஆம் ஆண்டுகளுக்கான பசுமை விருதுகளை இன்று (அக்டோபர் 12) தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கச் சிறந்து விளங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடனும், மாசுத் தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் தொழில் நிறுவனங்களைப் பாராட்டும் வகையிலும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஆண்டுதோறும் மூன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மூன்று தொழில் நிறுவனங்களைத் தேர்வு செய்து பசுமை விருதுகளை வழங்கிவருகிறது.

அந்த வகையில் 2014ஆம் ஆண்டுக்கான பசுமை விருதுகள் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கே.விவேகானந்தன், முன்னாள் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் கே.எஸ்.பழனிச்சாமி, முன்னாள் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

2015ஆம் ஆண்டுக்கான விருதுகள் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபாகர், முன்னாள் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர், முன்னாள் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

2016ஆம் ஆண்டுக்கான விருதுகள் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆசியா மரியம், தேனிமாவட்ட ஆட்சித் தலைவர் வேங்கடாசலம், முன்னாள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் ஞானசேகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

மாசுத் தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கிய தொழில் நிறுவனங்களுக்கான 2015ஆம் ஆண்டுக்கான பசுமை விருதுகள் தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட், கூடங்குளம் அணுமின் நிலையம், மிசெலின் இந்தியா பிரைவேட் லிமிடெட், லேன்கோ தஞ்சாவூர் பவர் நிறுவனம் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன.

2016ஆம் ஆண்டுக்கான விருதுகள் கோஸ்டல் எனர்ஜன் பிரைவேட் லிமிடெட், ஹூண்டாய்மோட்டார்ஸ் இந்தியா லிமிடெட், டால்மியா சிமெண்ட்ஸ் (பாரத்) லிமிடெட், ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் முகமது நசீமுத்தின், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உறுப்பினர் செயலர் என். சுந்தரகோபால் ஆகியோர்களுடன் அரசு உயர் அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon