மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

ஸ்பான்சர்ஷிப்பை இழந்த பென் ஸ்டோக்ஸ்

ஸ்பான்சர்ஷிப்பை இழந்த பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், சமீபத்தில் சாலையில் ஒரு நபரைத் தாக்கிய சர்ச்சையில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியதனால் அவரது ஸ்பான்சர்ஷிப் பறிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது 27 வயது இளைஞரை சாலை ஓரத்தில் கடுமையாக தாக்கியுள்ளார் பென் ஸ்டோக்ஸ். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. சமீபத்தில் டிவி நிகழ்ச்சியின் போது இங்கிலாந்து நாட்டின் பிரபல நடிகை கேத்தி ப்ரைஸின் மகனைக் கலாய்த்து மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கேத்தி ப்ரைஸின் மகன் ஹார்வி, மரபணு நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் செயல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்தின் முன்னணி நிறுவனமான நியூ பேலன்ஸ், பென் ஸ்டோக்ஸ் உடனான தனது ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்துள்ளது.

இதுகுறித்து நியூ பேலன்ஸ், நிறுவனம் "எங்களது நிறுவனத்தின் கொள்கைக்கு மாறாகச் செயல்படும் எந்த ஒரு வீரரையும் நாங்கள் மன்னிக்க மாட்டோம். எனவே பென் ஸ்டோக்ஸ் உடனான எங்களது ஒப்பந்தம் அக்டோபர் 11 முதல் ரத்து செய்யப்படுகிறது" என்று தெரிவித்துள்ளது.

சாலையோரம் நபரைத் தாக்கிய வழக்கில் தீர்ப்பு வரும் வரை இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் விளையாட முடியாது என ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் வேலஸ் கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது. அதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. இதனிடையே தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருப்பது இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon