மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

மதுபான விலை உயர்வா?

மதுபான விலை உயர்வா?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று (அக்.11) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுவகைகளின் விலையை உயர்த்திக்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

கடைசியாக 2014ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி டாஸ்மாக் மதுபானங்களின் விலை ஏற்றப்பட்டது. அதன் பின்னர் தற்போதுதான் ஏற்றப்படவுள்ளது. குவார்ட்டர் அளவு கொண்ட பிராந்தி, விஸ்கி, ஓட்கா, போன்றவற்றின் விலை ரூ.10 முதல் ரூ.12 வரை உயரவுள்ளது. ஆஃப் அளவுகொண்ட மது வகைகளின் விலை ரூ. 20 வரையும் 720 மி.லி. அளவு கொண்ட மது வகைகளின் விலை ரூ.40 வரையிலும் அதிகரிக்கவுள்ளதாகத் தெரியவருகிறது. பீர் விலையில் தற்போது ஏற்றமில்லை என்றே கூறப்படுகிறது.

இந்த விலையேற்றம் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 600 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்தை.2.57 மடங்கு அதிகரித்து தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.14,719 கோடி கூடுதல் செலவாகும் என்றும் இதனை அரசே ஏற்கும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்தச் செலவை சமாளிக்கும் விதமாகவே டாஸ்மாக் மதுவகைகளின் விலை உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்குச் சில நாட்களே உள்ள நிலையில் அதனை மனதில் வைத்தும் இந்த விலையேற்றத்துக்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திருச்செல்வத்திடம் பேசியபோது, ஜி.எஸ்.டி காரணமாக மதுபானங்களை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. எனவே மதுபான விலையை உயர்த்த வேண்டும் என அரசுக்குப் பரிந்துரைத்தோம். மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி 4300 டாஸ்மாக் வரை மூடப்பட்டதால் அரசின் வருவாயும் 15 சதவிகிதம்வரை குறைந்துள்ளது. எனவே மதுபானங்களின் விலையை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. விலையேற்றம் தொடர்பான அறிவிப்பு இந்த வாரத்துக்குள் வெளியாகும். மதுபானங்களின் விலையில் 10 சதவிகிதம் வரை உயர்வு இருக்கலாம் என்று தெரிவித்தார்.

மேலும், டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். டாஸ்மாக் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. விலையேற்றம் மூலம் கூடுதலாக 5 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கலாம். டாஸ்மாக்கில் 30 ஆயிரம் ஊழியர்கள் வரை பணியாற்றினர். தற்போது 27 ஆயிரம் ஊழியர்களே உள்ளனர். எனவே அவர்களுக்கு இந்த 5 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயில் இருந்து ரூ. 100 கோடியைச் செலவழிப்பது என்பது பெரிய காரியமல்ல என அவர் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் இந்தத் தகவல் ‘குடிமகன்’கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இது தொடர்பாக, வழக்கமாக மது அருந்தும் ஒருவரிடம் நாம் பேசியபோது, “ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட குவாட்டருக்கு ரூ.5, பீருக்கு ரூ. 10 கூடுதலாக வசூலிக்கின்றனர். இந்த நிலையில் அரசும் விலையை ஏற்றியுள்ளது கூடுதல் சுமையாக அமையும். மது அருந்துபவர்களுக்கு இதன் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால் டாஸ்மாக்கில் கூடுதலாக வசூலிக்கப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon