மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

இந்தியாவை அச்சுறுத்தும் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள்!

இந்தியாவை அச்சுறுத்தும் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள்!

பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக அணு ஆயுதங்களைப் பல இடங்களில் சுரங்கம் தோண்டிபதுக்கி வைத்திருப்பது குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் ஐ.நா சபையில் பேசிய பாகிஸ்தான் நாட்டு அரசின் ராணுவ அதிகாரி “பாகிஸ்தானில் 30க்கும் மேற்பட்ட சிறிய வகையிலான ஏவுகணைகளைப் பத்திரமாக பதுக்கி வைத்துள்ளோம். அதனால் யாருக்கும் தொந்தரவு இல்லை“ எனக் கூறினார். இதற்கு உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அமெரிக்கா தகவல்

ஆனால் கடந்த மாதமே பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுத ரகசிய மையங்கள் குறித்த தகவல்களை அமெரிக்கா வெளியிட்டதை நாம் இப்போது நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு (FAS) பாகிஸ்தான் நாட்டில் ஒன்பது வெவ்வேறு இடங்களில் அணு ஆயுதங்களைப் பதுக்கி வைத்துள்ளது எனக் கூறியது. அதில், பாகிஸ்தான் தனது ஆயுதக் கிடங்குகளை விரிவுபடுத்தி வருவதாகவும், பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களில் அணு ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும், 130 முதல் 140 வரையிலான அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும், ஏவுகணைகள், ராக்கெட்டுகள், டார்பிடோக்கள் போன்றவை அந்நாட்டிடம் இருப்பதாகக் கூறப்பட்டது. மேலும் செயற்கைக்கோள் புகைப்படங்கள், நிபுணர்களின் ஆய்வுகள், உள்ளூர் செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய தகவல்

இந்த நிலையில்தான் தற்போது பாகிஸ்தான் அணு ஆயுதங்களை மறைத்து வைக்கப் பயன்படுத்திய சுரங்கங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி அதிர வைத்துள்ளது. இந்திய ராணுவத்தினருக்குக் கிடைத்துள்ள அந்த ரகசிய சுரங்க விவரங்கள் இதோ: இந்தச் சுரங்கத்தை இந்தியாவின் தலைநகர் டெல்லியிலிருந்து 750 கிமீ தொலைவிலும் , பஞ்சாபிலிருந்து 350 கிமீ தொலைவிலும், அமிர்தசரசிலிருந்து 550 கிமீ தொலைவிலும் இந்தியாவைக் குறி வைத்துத் தாக்கும் அளவில் பூமிக்கடியில் அமைத்துள்ளது பாகிஸ்தான் . இந்தச் சுரங்கங்கள் 10 மீட்டர் உயரமும் 10 மீட்டர் அகலமும் கொண்டு 5 கிமீ வரையில் தோண்டப்பட்டுள்ளது. இந்தச் சுரங்கத்தில் மேல் பகுதியில் இந்திய எல்லைகளை இணைக்கும் சாலைகள் இருக்கிறது. இந்தச் சுரங்கத்திற்கு உள்ளே செல்லவும், வெளியேறவும் தனித் தனி வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுரங்கத்திற்குள் 12 முதல் 14 அணு ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருக்க வாய்ப்புகள் அதிகம் என உளவுத்துறை கூறியுள்ளது. மேலும் இந்தச் சுரங்கத்தை சுற்றிப் பாதுகாப்பாக முள்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் மிரட்டல்

இதை நிரூபிக்கும் விதமாக இந்தியாவுக்குப் பதிலடி கொடுப்பதற்காகச் சிறிய தூர இலக்கைத் தாக்கும் ஏவுகணை தயாரிக்கப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon