மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

களத்தில் ஸ்டாலின்

களத்தில் ஸ்டாலின்

சென்னை கொளத்தூர் தொகுதியில், சாலையோரங்களில் கிடந்த குப்பைகளை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அகற்றினார்.

தமிழகத்தில் சாலையோரங்களில் குப்பைகளைக் கொட்டுவது அதிகரித்துவருகிறது. இதனால் நோய்கள் வேகமாகப் பரவுகின்றன. ஏடிஸ் என்ற கொசுவால் டெங்கு காய்ச்சல் தற்போது தமிழகத்தில் வேகமாகப் பரவிவருகிறது. 400க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள தமிழக அரசு, நேற்று (அக்டோபர் 11) வரை டெங்கு காய்ச்சலுக்கு 40 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று (அக்டோபர் 12) சாலையோரங்களில் கிடந்த குப்பைகளை அகற்றினார். அதன் பின், குவியலாகச் சேர்க்கப்பட்ட குப்பைகள் ஜேசிபி மூலம் வாகனங்களில் ஏற்றப்பட்டன. தொடர்ந்து திமுகவினர் குப்பைகளை அகற்றிவருகின்றனர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின் கூறுகையில், "டெங்கு பரவல் தடுப்புப் பணிகளில் திமுகவினரும் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன். இந்தக் கொடுமைகளுக்கு முக்கியக் காரணம், உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெறாமல் இருப்பதுதான். உள்ளாட்சித் தேர்தல் நடந்திருந்தால், ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருந்திருப்பார்கள். அவர்கள் சுகாதார சீர்கெடுகளைக் களையும் பணியில் ஈடுபட்டிருப்பார்கள். டெங்கு காய்ச்சலும் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், இந்த ஆட்சி குதிரை பேர ஆட்சியாக நடந்துகொண்டிருக்கிறது.

மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாத நிலையில் குழப்பதிலே அவர்கள் இருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டுமென்று உயர் நீதிமன்றமே உத்தரவு போட்டிருக்கிறது. அந்தத் தீர்ப்பைக்கூட மதிக்காமல், அதை எப்படித் தள்ளிப்போடுவது என்பதில்தான் அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். இதனால்தான் டெங்கு இந்த அளவுக்குப் பரவியிருக்கிறது. டெங்கு ஒழிய வேண்டுமென்று சொன்னால், எடப்பாடி தலைமையில் இருக்கும் இந்த டெங்கு ஆட்சி ஒழிய வேண்டும். இந்த டெங்கு ஆட்சி ஒழிந்தால்தான் டெங்கு ஒழியும்" என்றார்.

மேலும் பேசிய அவர், இந்த அரசே முரண்பட்ட அரசுதான். டெங்குவைக் கட்டுப்படுத்த வேண்டும். உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து என்றார் ஸ்டாலின்.

“டெங்கு உயிரிழப்பு குறித்து ஆதாரத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் கூற வேண்டும் என்று அமைச்சர் சரோஜா கூறியிருக்கிறார். ஒவ்வொரு அரசு மருத்துவமனைக்கும் ஒவ்வோர் ஊருக்கும் வரச் சொல்லுங்கள். வந்து பார்க்கச் சொல்லுங்கள். அப்போது, ஆதாரத்தைக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்'' என்று ஸ்டாலின் சவால் விடுத்தார்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon