மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

ஆசிய கால்பந்து: இந்திய சீனியர் அணி தகுதி!

ஆசிய கால்பந்து: இந்திய சீனியர் அணி தகுதி!

17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிஃபா கால்பந்து போட்டிகள் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலிரண்டு ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியடைந்த இந்திய அணி, காலிறுதி வாய்ப்பை ஏறத்தாழ இழந்துவிட்டதால் கால்பந்து ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் 2019ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஆசியா கால்பந்து போட்டிக்கு சீனியர் கால்பந்து அணி, தகுதி பெற்று அசத்தியுள்ளது.

ஏஎப்சி ஆசிய கோப்பை கால்பந்து போட்டித் தொடருக்கான தகுதி சுற்று பெங்களூருவில் நேற்று (அக்டோபர் 11) நடைபெற்றது. இந்தப்போட்டியில் இந்திய அணி மக்காவ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில், 28வது நிமிடத்தில் இந்திய அணிக்கு போஜர்ஸ் முதல் கோல் அடித்தார். 37வது நிமிடத்தில் மக்காவ் வீரர் நிகோலஸ் பதில் கோல் அடித்து 1-1 எனச் சமன் செய்தார். அதன் பிறகு 60வது நிமிடத்தில் சுனில் சேத்ரி இரண்டாவது கோலை அடித்து இந்தியாவிற்கு 2-1 என முன்னிலை பெற்றுத் தந்தார். அதன் பிறகு 70வது நிமிடத்தில் மக்காவ் வீரரின் சேம் சைடு கோல் மூலம் இந்திய அணிக்கு ஒரு கோல் கிடைத்தது. 90வது நிமிடத்தில் இந்திய வீரர் ஜெஜே மேலும் ஒரு கோல் அடிக்க, இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக 4வது வெற்றியுடன் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த இந்தியா 2019 ஆசிய கோப்பை தொடருக்குத் தகுதி பெற்றது.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon