மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

முதல்வருடன் மோதலா? மோடியை சந்தித்த பன்னீர் பதில்!

முதல்வருடன் மோதலா? மோடியை சந்தித்த  பன்னீர் பதில்!

துணை முதல்வர் பதவி ஏற்ற பிறகு ஓ. பன்னீர்செல்வம் முதன்முறையாக இன்று (அக்டோபர் 12) பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்திருக்கிறார்.

அணிகள் இணைவதற்கு முன்பு இரு அணியினரும் அடிக்கடி டெல்லி சென்று பிரதமர் மோடியையும், மத்திய அமைச்சர்களையும் சந்தித்து வந்தனர். ஆனால் இரு அணிகளும் இணைந்த பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் ஆகியோர் பிரதமரை சந்திக்கவே இல்லை.

இந்த சூழ்நிலையில் அணிகள் இணைந்த பிறகு இரண்டாவது முறையாக நேற்று தனது அணியினருடன் டெல்லி சென்ற பன்னீர்செல்வம், இன்று ( அக்டோபர் 12) பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.

மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இன்றைய காலை பதிப்பில் நாம் குறிப்பிட்டது போல தனது அணியினருடன் டெல்லி சென்று பிரதமரை சந்தித்திருப்பது, அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமாக செயல்படும், மின்துறை அமைச்சர் தங்கமணியை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பிரதமரை சந்தித்துவிட்டு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம்,

‘’தமிழகத்தின் மின் தேவைக்கான நிலக்கரி பற்றாக்குறை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளுக்காக முதல்வர் அனுப்பிய மனுவையே பிரதமரிடம் கொடுத்துள்ளேன். பிரதம மந்திரியின் வீடுகட்டும் திட்டம் குறித்தும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்தும் பணிகள் குறித்தும் பிரதமரிடம் எடுத்துரைத்தேன். இந்த சந்திப்பில் வேறு எதுவும் அரசியல் இல்லை’’ என்ற துணை முதல்வர் மேலும்,

‘’முதல்வர் பழனிசாமியுடன் எனக்கு எந்த மன வருத்தமும் இல்லை. முதலமைச்சர் என்னை கலந்து ஆலோசித்துதான் முக்கிய முடிவுகளை எடுக்கிறார். அதனால் எங்களுக்குள் எந்த மோதலும் வருத்தமும் இல்லை. எனவே பிரதமரிடம் நான் எந்த அரசியலும் பேசவில்லை. அதனால்... ’கூறப்படுகிறது, அறியப்படுகிறது’ என்று நீங்கள் சொல்வதற்கெல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது’’ என்றார் ஓ.பன்னீர்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon