மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

அரசு மருத்துவமனை: பிரேமலதாவுக்கு மறுப்பு!

அரசு மருத்துவமனை: பிரேமலதாவுக்கு மறுப்பு!

டெங்குவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்துவரும் நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழகம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, தேமுதிக கட்சியினர் நேரில் சென்று உதவிகள் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், “தமிழகம் முழுவதும் ஆட்கொண்டிருக்கும் டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தேமுதிகவின் அனைத்து மாவட்டங்கள் சார்பாக, அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை, 'இயன்றதைச் செய்வோம்... இல்லாதவர்க்கே' என்ற பாணியில் நாம் உதவிகள் வழங்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை பார்வையிட்டு அவர்களுக்கு பழம், ரொட்டி ஆகியவை வழங்க பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை கோவை வந்தார்.

பிரேமலதா வருகையையொட்டி அரசு மருத்துவமனை முன்பு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிக அளவில் திரண்டனர். இந்நிலையில் நோயாளிகளைப் பார்க்க பிரேமலதாவை அனுமதிக்கக் கூடாது என்று அரசு மருத்துவமனை டீன் டாக்டர் அசோக்குமார் உத்தரவிட்டிருந்தார்.

இது பற்றித் தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த தேமுதிகவினர் கடும் வாக்குவாதம் செய்தனர். அவர்கள் கூறும்போது முறைப்படி நேற்று அனுமதி கேட்டுக் கடிதம் கொடுக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இன்று திடீரென வேண்டும் என்றே அனுமதி மறுப்பது கண்டிக்கத்தக்கது என்றனர்.

அந்த நேரத்தில் பிரேமலதா அரசு மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அவரை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் அசோகன் சந்தித்துப் பேசினார். மருத்துவமனைக்குக் கூட்டமாகச் செல்லக் கூடாது, ஒரு சிலர் மட்டும்தான் செல்ல வேண்டும் என்றார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. டெங்கு வார்டுக்குள் செய்தியாளர்கள் உட்பட வெளியாட்கள் யாரையும் அனுமதிப்பதில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. நீண்ட நேர வாக்குவாதத்துக்குப் பின்னர் பிரேமலதா அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து பிரேமலதா மற்றும் 4 நிர்வாகிகள் மட்டுமே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை சந்தித்தனர். நோயாளிகளிடம் பிரேமலதா நலம் விசாரித்து ரொட்டி, பழம் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்களை தேமுதிகவினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர்.

விஜயகாந்த் இன்று திருவள்ளூரில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார். “உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததே டெங்கு காய்ச்சலுக்கு முக்கியக் காரணம். பதவியைத் தக்க வைப்பதற்காகவே பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளார். தற்போது நடைபெறும் மர்மமான ஆட்சி விரைவில் கலைக்கப்படும்” என்று விஜயகாந்த் தெரிவித்தார்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon